Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

பொருளாதாரத்தில் விவசாயிகளை தன்னிறைவு பெறச் செய்யும் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வேளாண் துறை சிறப்புச் செயலாளர் ஆபிரகாம், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினரும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தனர்.

சென்னை

பொருளாதாரத்தில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் தமிழக வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 2021-22ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்வரும் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், வேளாண் துறை சிறப்பு செயலர் ஆபிரகாம், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ மற்றும் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை அதிகாரிகள், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியதாவது:

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் வேண்டும் என்று, நாடு சுதந்திரம் அடைந்தது முதலே விவசாயிகள் கோரி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பேரவையில் வரும் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு விவசாய சங்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள் சார்ந்த வியாபாரம், ஏற்றுமதியில் ஈடுபடும் சங்கங்களிடமும் பேசப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் இதில் இருக்கும். கரும்பு சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறை, வெட்டுக்கூலிபோன்ற பிரச்சினைகள் இருப்பதால், கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.1,200 கோடி பெறுவதில் உள்ளபிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்ஏற்றுமதி தொடர்பாக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

வேளாண் பட்ஜெட் தாக்கலான பிறகு, நலிவுற்ற தனியார் கரும்பு ஆலைகளுடன் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x