Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தடை விதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் வெறிச்சோடிய நீர்நிலைகள்: சதுரகிரியில் பக்தர்கள் பங்கேற்பின்றி ஆடி அமாவாசை திருவிழா

ஆடி அமாவாசையான நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை. படம்: எல்.பாலச்சந்தர்

திருச்சி/விருதுநகர்/ராமநாதபுரம்

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம், ராமேசுவரம், சதுரகிரி உள்ளிட்ட இடங்கள் நேற்று வெறிச்சோடின.

மறைந்த தங்களது தாய், தந்தையர் மற்றும் மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளன்று பிதுர்கடன் செலுத்துவது இந்துக்கள் வழக்கம். இதில், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதனால், ஆடி அமாவாசையையொட்டி, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து காவிரியில் புனித நீராடி புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா காரணமாக மக்கள் குழும தடை விதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை நேற்று முன்தினம் மாலை மூடப்பட்டு, பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. இதனால், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நேற்று அம்மா மண்டபம் வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

எனினும், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆற்றில் ஏராளமானோர் திரண்டு தர்ப்பணம் செய்தனர். போலீஸார் அங்கு சென்று அனைவரையும் வெளியேற்றினர்.

ராமேசுவரம்

ஆடி அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கானோர் திரளும் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல்நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது. ராமநாத சுவாமி கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. வழக்கமாக ஆடி அமாவாசை நாளில் நான்கு ரத வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெறும். கரோனா ஊரடங்கால் சுவாமி, அம்பாள் புறப்பாடு நேற்று காலை 9 மணிக்கு 3-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது. அதையடுத்து காலை 11 மணிக்கு அம்மன் சன்னதி அருகே சிவதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது.

சதுரகிரி

விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவின்போது ஒரே நாளில் சுமார் 1.50 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.

ஆனால், கரோனா ஊரடங்கால் நேற்று வெறிச்சோடியது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்புப் பூஜைகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தன.

பக்தர்கள் மலைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் மாந்தோப்பு விலக்கு, மாவூத்து விலக்கு, வத்திராயிருப்பு விலக்கு ஆகிய பகுதிகளில் வாகனத் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x