Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

காசிமேடு துறைமுகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த மீன் விற்பனைக்கான நேரக் கட்டுப்பாடு அமல்

காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய நேரக்கட்டுப்பாடு அமலாகியுள்ளது. இதன்படி, நேற்று நடைபெற்ற மொத்த விற்பனையில் மீன்களை வாங்க திரண்ட வியாபாரிகள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த, மீன் விற்பனைக்கான நேரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளின் மூலம் கடலுக்கு சென்று மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மீன்களை வாங்க வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்நிலையில் இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த, மீன்களை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டும் ஏலம்விட நேரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மீன்களை ஏலம் விடும் பணி தொடங்கியது. நேற்று அதிகாலை ஏராளமான மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்கிச் சென்றனர். இதை தொடர்ந்து, நவீன மீன் விற்பனை அங்காடியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மீன் விற்பனை நடைபெற்றது. இதே போல், படகு பழுது பார்க்கும் இடத்தில் சிறிய படகுகளில் தினசரி பிடித்து வரும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு, பல்வேறு பகுதிகளில் பிரித்து மீன் விற்பனை செய்யப்பட்டதால் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்குள் அடையாள அட்டை வைத்துள்ள மீனவர்கள், மொத்த வியாபாரிகள் உள்ளிட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்கும்படி மீன்வளத் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x