Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோயில் குளங்களின் அருகே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடி அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக இந்த நாளில், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இதனால், கடற்கரைகள், கோயில் குளங்களின் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால், தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தற்போது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகிய நாட்களிலும் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கோயில்கள் நேற்று திறக்கப்படவில்லை. கோயில் குளங்களுக்கு வெளியே ‘தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை’ என்று பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை முதலே ஏராளமானோர் வந்தவண்ணம் இருந்தனர். தர்ப்பணம் செய்வதற்காக கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர், ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். பல கோயில்களிலும் பக்தர்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் நின்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
வடபழனி முருகன், பாடிகாட் முனீஸ்வரர் கோயில்களில் பக்தர்கள் வெளியே நின்றபடியே சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT