Published : 23 Feb 2016 11:48 AM
Last Updated : 23 Feb 2016 11:48 AM
மகாமகப் பெருவிழாவையொட்டி முன்னிட்டு 5 வைணவக் கோயில் களில் பிப்ரவரி 14-ம் தேதி கொடியேற் றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த கோயில்களில் உற்சவர்கள் வீதியுலா புறப்பாடுடன் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
9-ம் திருநாளான நேற்று வைணவ திருத்தலங்களின் பெருமாள்கள் உபயநாச்சியார்களுடன் அந்தந்த கோயில்களிலிருந்து புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக சக்கரப் படித்துறை அருகேயுள்ள சாரங் கபாணி தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளினர்.
பின்னர் தீர்த்தவாரிவாரி மண்டபத்தில் ஒரே இடத்தில் 5 பெருமாள்களும் தாயாருடன் எழுந்தருளினர். தொடர்ந்து தீர்த்தபேரருக்கு திருமஞ்சனம் நடைபெற்றபோது பட்டாச் சாரியார்கள் வேதமந் திரங்களை முழங்கினர். தொடர்ந்து வானத்தில் கருடன் மூன்று முறை வட்டமிட 5 தீர்த்தபேரர்களும் ஒரே நேரத்தில் காவிரியில் தீர்த்தவாரி கண்டருளினர். இதையடுத்து, காவிரி ஆற்றில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள், “சாரங்கா, சக்கரராஜா, ஆதிவராகா, ராமா, ராமா, ராஜகோபாலா, நாராயணா, கோவிந்தா” என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி புனித நீராடினர்.
ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின்போது சக்கரப் படித்துறையில் தனித்தனியாக உள்ள சாரங்கபாணி மற்றும் சக்கர பாணி படித்துறையில் 5 கோயில் பெருமாள்களும் தாயாருடன் எழுந்தருளி புனித நீராடுவர். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின்போது மட்டும்தான் சாரங்கபாணி தீர்த்தவாரி மண்டபத்தில் தாயாருடன் ஒரே மண்டபத்தில் எழுந்தருளுள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாமகக் குளக்கரையில் தீர்த்தவாரிக்கு முன்
ஆதிகும்பேஸ்வரர் கோயில் அஸ்திரதேவருக்கு
நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
மகாமக தீர்த்தவாரியையொட்டி காவிரி சக்கரப் படித்துறையில்
நேற்று பக்தர்களுக்கு சேவைசாதித்த வைணவ கோயில்களின் சுவாமிகள்.
மேற்கு கரையில் தள்ளுமுள்ளு
மகாமகக் குளக்கரைக்கு புனிதநீராட வரும் பக்தர்கள் குளத்தின் கிழக்குக் கரையில் இறங்கி நீராடிவிட்டு, மேற்குக் கரையில் ஏறிச் செல்ல போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். குளத்தில் தீர்த்தவாரிக்கான ஆயத்தப்பணிகள் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந் தபோது, மேற்கு கரையில் நின்று கொண்டிருந்த பக்தர் கள் குளத்தில் இறங்க முற்பட் டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.
எம்எல்ஏவை தடுத்த போலீஸார்
மகாமகக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் பங்கேற்க வந்த கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனை குளத்தின் அருகில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி, உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் வந்து எம்எல்ஏவை அனுமதித்தனர்.
காவிரியில் பக்தர்கள் வெள்ளம்
மகாமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத் தில் குவிந்த லட்சகணக்கான பக்தர்கள் முதலில் மகாமகக் குளத்தில் நீராடிவிட்டு, பின்னர் பொற்றாமரைக் குளத்தில் நீராடினர். அதன்பிறகு காவிரி ஆற்றில் சக்கரப் படித்துறை, பகவத் படித்துறை, டபீர் படித்துறை ஆகிய இடங்களில் நீராடினர். இதனால் காவிரியில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது.
காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறையில் நீராடுவதற்காக
தலையில் உடைமைகளுடன் வந்த பக்தர்கள்.
வெயிலில் பக்தர்கள் அவதி
மகாமகக் குளத்தில் நீராடும் பக்தர்கள் அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கும், பின்னர் அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றுக்கு நடந்து சென்றனர். கால்களில் செருப்பு இல்லாததால் நடந்து சென்ற பக்தர்களில் பெரும்பாலானோர் வெயிலில் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பெண்கள், குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருந்தது. நேற்று ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லாததால் உள்ளூர் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
மினி பஸ்கள் இயங்காததால் அவதி
பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயம் அம்மாள் கூறியபோது, “நாங்கள் 5 பேர் மகாமகத் திருவிழாவுக்காக நேற்று காலை பஸ் மூலம் கும்பகோணம் வந்தோம். தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து குளம் அருகே வரை மினி பஸ்கள் இயக்கப்படும் என்றார்கள். ஆனால், நேற்று மினி பேருந்துகள் இயக்கப்படாததால் நாங்கள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே வருகிறோம்" என்றார்.
40 சிறப்பு மலர், 9 காலண்டர்
மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு பழம்பெருமை மிக்க தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் ‘மகாமகம் 2016’ சிறப்பு மலரும், மேஜையில் வைக்கும் மற்றும் சுவரில் மாட்டும் இரண்டு வகை மாத காலண்டர்களும் வெளியிடப்பட்டன. சிறப்பு மலர் ரூ.300, காலண்டர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கும்பகோணம் ரயில் நிலையத்தின் வெளியே, நூலகம் சார்பில் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. பல லட்சம் பேர் வந்து இறங்கிச் சென்றபோதும், கடந்த 10 நாட்களில் 40 மலர்கள், 9 காலண்டர்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. விலை அதிகம் என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காஞ்சி ஜெயேந்திரர் புனித நீராடல்
காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரர், விஜயேந் திரர் ஆகியோர் மகாமகக் குளத்தில் நேற்று காலை 5 மணியளவில் வந்து நீராடி விட்டுச் சென்றனர். பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இலங்கை எம்.பி. சீனுதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் மகாமகக் குளத்தில் நீராடினர்.
ஆய்வு...
மகாமகப் பெருவிழாவை யொட்டி சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். மகாமகக் குளம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வெப்பம் தணித்த உள்ளூர் மக்கள்
கும்பகோணத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற மகாமகம் தீர்த்தவாரியையொட்டி, சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் கால்களுடன் நடந்து சென்ற பக்தர்களுக்கு உதவும் வகையில், அந்தந்த தெருக்களில் வசிக்கும் மக்கள் தண்ணீரை தரையில் ஊற்றி, வெயிலின் தாக்கத்தை தணித்தனர். விடுமுறை என்பதால் குழந்தைகள், சிறுவர்கள் இதில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
மகாமகம் குளத்துக்கு செல்லும் பருத்திக்காரத் தெருவில்
வெயிலின் தாக்கத்தை தணிக்க சாலையில் தண்ணீர் ஊற்றும் குழந்தைகள்.
அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்...
பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் மகாமகக் குளத்தை நோக்கி அதிக அளவில் வருவார்கள் என்பதால், போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான இரும்பு கேட்டுகளை அமைத்திருந்தனர். தீர்த்தவாரி நேரத்தின்போது பகல் 12 மணி முதல் குளத்தில் அதிக அளவில் பக்தர்கள் இருந்ததால், இந்த கேட்டுகளை போலீஸார் மூடி பக்தர்களை நிறுத்திவைத்தனர். தீர்த்தவாரி முடிந்த பிறகு ஒவ்வொரு கேட்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் குளத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த பணியை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸார் வயர்லெஸ் மைக் மூலம் ஒருங்கிணைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த பசுபதி கூறுகையில், மகாமக குளத்தில் நீராட வந்தோம். ஆனால் குளத்துக்கு செல்லும் வழியில் இரும்பு கேட்டுகளை வைத்து அடைத்துவிட்டனர். பகல் நேரத்தில் வெயில் அதிமாக இருந்ததால் குடிக்க தண்ணீர், கழிவறை போன்ற எதுவும் இல்லாமல் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்” என்றார்.
காவிரியில் பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறையினர்...
காவிரி ஆற்றில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் விரைவாக சென்று நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தீயணைப்பு துறையின் துணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றுவிடாமல் இருப்பதற்காக
கும்பகோணம் காவிரிப் படித்துறை பகுதியில் காற்று மிதவையுடன்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்.
மகாமகக் கோயில்களில் இன்று…
# மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: உற்சவ திருமேனிகள் அபிஷேகம், காலை 10, ஸப்தாவர்ணம் (சுவாமி, அம்பாள் கோயில் உட்பிரகாரத்தில் ஏழு முறை வலம் வருதல்), இரவு 8.
# சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: ஸப்தாவர்ணம், இரவு 7.
# பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழா: ஸப்தாவர்ணம், ஏகாந்தக் காட்சி, இரவு 8.
# விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: ரிஷப வாகனம், பஞ்சமூர்த்தி திருவீதியுலா, இரவு 7.
# ராஜகோபால சுவாமி கோயில்: த்வாதச ஆராதனம், மாலை 5, ஸப்தாவர்ணம் புறப்பாடு, இரவு 8.
# சக்கரபாணி சுவாமி கோயில்: ஸப்தாவர்ணம், தோளுக்கினியன், இரவு 7.
# சாரங்கபாணி கோயில்: ஸப்தாவர்ணம், முற்பகல் 11, பெருமாள் ஸப்தாவர்ண புறப்பாடு, இரவு 7.
ராம சுவாமி கோயில்: த்வாச ஆராதனம், ஸப்தாவர்ணம் புறப்பாடு, இரவு 7.
தீர்த்தவாரியையொட்டி நேற்று மகாமகக் குளத்தின் படிக்கட்டுகளில்
அமர்ந்திருந்த ஆதீனகர்த்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT