Published : 08 Aug 2021 04:10 PM
Last Updated : 08 Aug 2021 04:10 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 08) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 கோட்டங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக தினந்தோறும் சுமார் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அனைத்துப் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளிலும் தூய்மைப் பணியைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் உள்ளன. இந்தச் சாலைகளில் மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மாநகரின் 200 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் சுமார் 5,000 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டு குப்பைகளைக் கையாளும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சாலைகளில் தூய்மைப் பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும் பொழுதும், குப்பைகள் அகற்றப்படும் பொழுதும் பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளில் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு பேருந்து சாலைகளிலும், உட்புறச் சாலைகளிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் சார்பில் இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்பொழுது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கும் வண்ணம் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 147 கம்பாக்டர் வாகனங்கள், 50 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், 23 டிப்பர் லாரிகளும் மற்றும் 1,786 தூய்மைப் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு அனைத்துத் தூய்மைப் பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT