Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

கரோனா விழிப்புணர்வு வாரம் நிறைவு: திருத்தணியில் பால்வளத் துறை அமைச்சர் தலைமையில் சைக்கிள் பேரணி

கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு நேற்று திருத்தணியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏ-க்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர்.

திருவள்ளூர்

கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு நேற்று திருத்தணியில் பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு வார நிகழ்வுகள் கடந்த 1-ம் தேதி தொடங்கின.

கரோனா விழிப்புணர்வு வாரம்நேற்று நிறைவுபெற்றது. இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுப் பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருத்தணி நகராட்சி அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், திருத்தணி நகராட்சி அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.

பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வுப் பேரணியில் அமைச்சரே சைக்கிள் ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நாரவாரிகுப்பம் பேரூராட்சி மற்றும் செங்குன்றம் அரிமா சங்கம் சார்பில், தனியார்கல்லூரி மாணவிகள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கரோனா விழிப்புணர்வுப் பேரணி நேற்று செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் நடைபெற்றது. இதில், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், பேரூராட்சி செயல்அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக, எமதர்மன், சித்திரகுப்தன்போல தெருக்கூத்துக் கலைஞர்கள் வேடமிட்டுச் சென்று, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x