Published : 07 Aug 2021 04:30 PM
Last Updated : 07 Aug 2021 04:30 PM
ஜவ்வாது மலையில் 427 கிராமங்களின் தலைமை நாட்டாமையாக 9 வயதுச் சிறுவன் சக்திவேலுக்கு முடிசூட்டப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது ஜவ்வாது மலை. 427 கிராமங்களுடன் பசுமை எழிலுடன் பரந்து விரிந்து ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இரண்டரை லட்சம் மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களது வழக்கப்படி, 36 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 'ஒரு நாட்டாமை, ஒரு ஊர் கவுண்டர், ஒரு மூப்பன்' ஆகியோர் செயல்படுகின்றனர்.
மேலும், இவர்களை வழிநடத்தும் பொறுப்பு, தலைமை நாட்டாமைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மன்னருக்கு நிகரான அதிகாரம் கொண்ட பதவியாகும். தலைமை நாட்டாமையின் தீர்ப்பை மதித்து, மலைவாழ் மக்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.
ஜவ்வாதுமலையின் தலைமை நாட்டாமையாக இருந்தவர், திருவண்ணாமலை மாவட்டம் மல்லிமடு கிராமத்தில் வசித்த சின்னாண்டி. 80 ஆண்டுகளாகப் பதவி வகித்த அவர், தனது 87-வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு, ஓராண்டாக தலைமை நாட்டாமை பதவி காலியாக இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, 36 கிராம நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள் மற்றும் மூப்பன்கள் ஆகியோர் முடிவு செய்தனர். இதையடுத்து, மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து, தங்களது தெய்வ நம்பிக்கையின்படி, காலமான சின்னாண்டிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டதும், தலைமை நாட்டாமையின் தேர்வுக்குத் தயாரானார்கள்.
விழாக்கோலம் பூண்ட மல்லிமடு
அப்போது, சின்னாண்டியின் 2-வது மகன் முத்துசாமியின் 9 வயது மகன் சக்திவேலை, தலைமை நாட்டாமையாக நியமிக்க வேண்டும் என அருள் வாக்கு கூறப்பட்டது. மறைந்த தலைமை நாட்டாமை சின்னாண்டியின் தெய்வ வாக்கை ஏற்றுக்கொள்வதாக நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பன்கள் ஆகியோர் அறிவித்தனர்.
இதையடுத்து, 427 கிராமங்களுக்குத் தலைமை நாட்டாமையாக சக்திவேலுக்கு முடிசூட்டப்பட்டது. அவரது சொந்த கிராமமான மல்லிமடுவில், கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி நடைபெற்ற முடிசூட்டும் விழாவில் மலைவாழ் கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று, சக்திவேலை அரியணையில் ஏற்றி, செங்கோல் வழங்கிக் கொண்டாடினர்.
கீழ்ப்படிந்து செயல்படுவோம்
இதுகுறித்து, மலைவாழ் மக்கள் கூறும்போது, "தலைமை நாட்டாமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோம். குலதெய்வ வழிபாடு, திருவிழா, சுப, துக்க நிகழ்ச்சிகள் என, அனைத்தும் தலைமை நாட்டாமையின் முன்னிலையில் நடைபெறும். அவரது திருக்கரங்களால் தாலி எடுத்துக் கொடுத்த பிறகே திருமணம் நடைபெறும்.
குடும்பம் மற்றும் சொத்துப் பிரச்சினைகள் என அனைத்தும் அவர் முன்பாகவே தீர்வு காணப்படும். எங்களது வாழ்வியல் முறையில் நாட்டாமை மற்றும் தலைமை நாட்டாமை என்பது ஒரு முக்கியப் பொறுப்பாகும். 9 வயதுச் சிறுவனாக இருந்தாலும், அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவோம்" என்றனர்.
தாத்தா வழியில் பயணம்
427 மலை கிராமங்களின் தலைமை நாட்டாமையாக முடிசூட்டப்பட்டுள்ள சக்திவேல், நாகலூர் கிராமத்திலுள்ள ஊராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
தலைமை நாட்டாமை பதவி குறித்து சக்திவேல் கூறும்போது, "தாத்தாவின் வழியில் பயணித்து, பெரியவர்களின் அறிவுரையை ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுவேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதற்கிடையில், சிறுவன் சக்திவேலுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை கிராமப் பெரியவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT