Published : 07 Aug 2021 03:03 PM
Last Updated : 07 Aug 2021 03:03 PM
கோவையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் இதுவரை 1,874 பேருக்கு ரூ.21.57 கோடி மதிப்பில் கரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கோவையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 112 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை, ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கும் படுக்கை, ஐசியு சிகிச்சை என, மூன்று சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை அளிக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும் என, முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, கோவையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 1,874 பேருக்கு இதுவரை ரூ.21.57 கோடி மதிப்பில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள கரோனா சிகிச்சை அளிக்கும் மொத்த படுக்கைகளில் 10 சதவீத படுக்கைகளை முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு பிரத்யேகமாக அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் கிஷோர்குமார் (7373004211), மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத் (7373004212), மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் டாக்டர் அன்சாரி (962953944) ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.
கோவையில் எந்த தனியார் மருத்துவமனைகளில் படுக்கை காலியாக உள்ளது என்ற விவரத்தை கரோனா அவசர உதவி மைய எண்ணான 0422-1077-ல் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். கருப்பு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சையும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக அளிக்கப்படுகிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT