Published : 07 Aug 2021 02:00 PM
Last Updated : 07 Aug 2021 02:00 PM
கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என, தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கெரோனா பேரிடர் காரணமாக, தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீதம் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால், பல மாணவர்கள் வேறு பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் சேர்ந்து வருகின்றனர்.
வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர், மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பிரச்சினை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதை எதிர்த்து, ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (ஆக. 07) விசாரித்தார். விசாரணையின்போது, தனியார் சுயநிதி பள்ளிகள் முழுக்க முழுக்க மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படுகிறது எனவும், எந்தெந்த மாணவர்கள் பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர், யார் யார் வேறு பள்ளிக்கு செல்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாவிட்டால், பள்ளிகளின் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என, மனுதாரர் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காகவே, கல்வித்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இக்கட்டான சூழ்நிலையில், அரசின் ஒவ்வொரு முடிவிலும் தலையிட முடியாது என்ற போதிலும், இரு தரப்பின் பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி, வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கட்டண பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, எந்த ஒரு காரணத்துக்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்கக் கூடாது எனவும், சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக இரு வாரங்களில் உரிய சுற்றறிக்கையை பிறப்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டால், இந்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனவும், தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT