Published : 07 Aug 2021 12:53 PM
Last Updated : 07 Aug 2021 12:53 PM
கோவை அன்னூர் அருகே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழுந்த விவகாரம் தொடர்பாக, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தின் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (விஏஓ) உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் உதவியாளரும், தண்டல்காரருமாக முத்துசாமி (56) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர், தனது சொத்து விவரங்களைச் சரிபார்ப்பு விஷயங்களுக்காக, விஏஓ அலுவலகத்துக்கு நேற்று (ஆக. 07) வந்துள்ளார். அப்போது, விஏஓ கலைச்செல்வி, கோபால்சாமியிடம் சரியான ஆவணங்கள் இல்லை என்றும், முறையான ஆவணங்களைக் கொண்டு வாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அப்போது, கோபால்சாமிக்கும், விஏஓக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தண்டல்காரர் முத்துசாமி குறுக்கிட்டு, அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி, சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இதையடுத்து, கோபால்சாமி, தண்டல்காரர் முத்துசாமியைத் திட்டியதோடு, புகார் அளித்து பணியிலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தண்டல்காரர் முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கதறி அழுதபடி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதை அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார். அருகிலிருந்த விஏஒ கலைச்செல்வி உள்ளிட்டோர், காலில் விழுந்த முத்துசாமியை சமாதானப்படுத்தி எழுப்ப முயன்றனர். ஆனால், கோபால்சாமி ஒன்றும் கூறவில்லை.
பின்னர், முத்துசாமி எழுந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்சியர் உத்தரவு
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி விசாரணை
இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மற்றும் அன்னூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
முத்துசாமி, விஏஓ அலுவலகத்தில் விஏஓ கலைச்செல்வி முன்னிலையில், காலில் விழுந்து கதறும் காட்சி கோவையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT