Published : 11 Jun 2014 11:07 AM
Last Updated : 11 Jun 2014 11:07 AM
குழந்தைநேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் உறுதியேற்போம் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 'குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைப் பருவ உரிமைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை நினைவுப்படுத்தும் வகையில் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
“எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” எனும் அவ்வை பிராட்டியின் பொன்மொழிக்கிணங்க எண்ணும் எழுத்துமாகிய கல்வியே குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்வழி காட்டிடும் கண்களைப் போன்ற பெருமை மிக்கது என்பதை பெற்றோரும், மற்றோரும் உணர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழித்து குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு முறையான கல்வி அளித்து வாடிநவில் மேம்படுத்திட வேண்டும் என்பதேதமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளுக்கு முழு வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளும் கல்விச் செல்வம் பெற்றிட, கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பை, சத்தான மதிய உணவு, கல்வி உபகரணங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து வசதி, ஊக்கத்தொகை போன்ற எண்ணற்ற திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கண்டறியப்படும் சூழலில், தமிடிநநாடு அரசால் அத்தகைய குழந்தைகள் உடனடியாக மீட்டெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி மையங்களில் அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
“இன்றைய நாற்றுகள், நாளைய விருட்சங்கள்” – என்பதனைக் கருத்தில் கொண்டு, அனைவரும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை வளமாக்கிட வேண்டும் என்றும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, குழந்தைநேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்றும் இந்நாளில் உறுதியேற்போம்". இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT