Published : 06 Aug 2021 09:12 PM
Last Updated : 06 Aug 2021 09:12 PM
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க, கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆக 6) நடந்த ஆய்வுக்கூட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மேற்கு மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக 6) நடந்தது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், மேற்கு மண்டல மாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், குற்றங்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்து எடுத்துக் கூறினர்.
அதைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது,‘‘ கஞ்சா மற்றும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் புழக்கத்தையும், விற்பனையையும், பயன்பாட்டை தடுக்க கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். சமூகத்துக்கு கேடு விளைவிக்கும், குற்றங்கள் செய்யத் தூண்டும் மேற்கண்ட பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் வாகனப் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள், மாநகர காவல் எல்லைகளில் சாலை விபத்து சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகரக் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கலந்து பேசி, பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினரின் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல், நிலுவையில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றார்.
இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், திருப்பூர், சேலம் மாநகர காவல் ஆணையர்கள், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மற்றும் சேலம் சரக டிஐஜிக்கள், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தின் 8 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிஜிபி ஆய்வு
டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாநகர காவல் ஆணையராக குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று வந்த டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். காவல் ஆணையர் அலுவலக வளாகத்தின் முகப்புப் பகுதியில் உள்ள வரவேற்பரைக்கு சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்கிருந்த பெண் காவலரிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தின் போது, சிறப்பாக வழக்குகளை புலன் விசாரணை செய்த காவலர்களுக்கு பரிசுகளையும் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT