Published : 06 Aug 2021 04:33 PM
Last Updated : 06 Aug 2021 04:33 PM
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் மூலக்கொத்தளம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதிமுக அவைத்தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடையவே, கடந்த மாதம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், நேற்று (ஆக. 05) மாலை அவர் காலமானார். அவரது உடல், தண்டையார்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அவரது உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடைய குடும்பத்தாருக்கு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுசூதனனின் உடல் இன்று மாலை அவரது இல்லத்திலிருந்து மூலக்கொத்தளம் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும், ஏராளமான அதிமுகவினரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, அவரது உடல் மூலக்கொத்தளம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT