Last Updated : 06 Aug, 2021 03:22 PM

 

Published : 06 Aug 2021 03:22 PM
Last Updated : 06 Aug 2021 03:22 PM

புதுச்சேரி: நிதியிருந்தும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத அவலம்

புதுச்சேரி

புதுச்சேரியில் போதிய நிதி இருந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் சுகாதாரத்துறையில் இரு மாத ஊதியம் வழங்காததால் ஒப்பந்த ஊழியர்கள் அவதியடைந்துள்ளனர்.

கரோனா காலத்தில் சுகாதாரத்துறையில் 294 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதில் காரைக்காலில் 255 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களாக ஊதியம் தரவில்லை என்று குறிப்பிடுகின்றனர். கரோனா பணியில் முழுமையாக ஈடுபட்டும் ஊதியம் தராத சூழல் நிலவுகிறது.

இதுபற்றி சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி கூறுகையில், "
”காரைக்காலில் கரோனா தடுப்பு பணியில் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் புதுவையில் பணிபுரியம் ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நீட்டிப்பு உத்தரவு வராததால் சம்பளம் வழங்கவில்லை என ஏற்க முடியாத காரணத்தை காரைக்கால் துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்து வருகிறது. காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறையும் சம்பளம் பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொற்று பரவலை தடுக்க தீவிர பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். இதை அரசு தரப்பு கவனத்துக்கு கொண்டு சென்று மனு தந்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பாளர் இதை கண்காணிக்கவேண்டும். குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தனித்தனியாக பணி நியமன ஆணை நகல் எடுத்து காரைக்காலுக்கு அனுப்ப வேண்டும். அதை செய்யவில்லை. காரைக்கால் ஊழியர்களுக்கு அலுவலக ஆணை தரப்படாலமும், போதிய நிதி இருந்தும் அவர்களின் சம்பள பில்லை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் இரு மாத ஊதியம் தரப்படவில்லை. கரோனா காலத்தில் இரு மாதங்களாக பணி புரிந்தும் சம்பளம் தரும் பணியை அதிகாரிகள் செய்யாமல் இருக்கும் போக்கு தவறானது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x