Published : 06 Aug 2021 01:53 PM
Last Updated : 06 Aug 2021 01:53 PM
உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, 7 தமிழர் விடுதலைக்குப் புதிய பரிந்துரையை ஆளுநருக்குத் தமிழக அரசு அனுப்ப வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 06) வெளியிட்ட அறிக்கை:
"வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்யாவிட்டாலும், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான சிக்கலில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.
ஹரியாணாவைச் சேர்ந்த வாழ்நாள் சிறை தண்டனைக் கைதி ஒருவரை, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே, விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
வாழ்நாள் சிறை தண்டனைக் கைதிகளை 14 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்த நிலையில், விடுதலை செய்த நிகழ்வுகள் தமிழகத்தில் பலமுறை நடந்துள்ளன. அதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இது புதிய விஷயமல்ல.
ஆனால், இத்தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தின் உதவியுடன் அவர் என்னென்ன முடிவுகளை எடுக்கலாம் என்பது பற்றி, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள்தான் மிகவும் முக்கியமானவை.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்க வகை செய்கின்றன. அந்தப் பிரிவுகளின்படி செய்ய முடியாத தண்டனைக் குறைப்பைக் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்றுச் செய்வதற்கு ஆளுநர்களுக்கு அதிகாரம் உண்டு என்பதுதான் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மையக்கரு ஆகும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்காகத் தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, அதைக் குடியரசுத் தலைவருக்குத் தமிழக ஆளுநர் அனுப்பி வைத்து விட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தப் புதிய வழிகாட்டுதல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டு, 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ஆனால், அதன்பின் இன்று வரை 1,063 நாட்கள் ஆகியும் இந்த விஷயத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. மாறாக, இச்சிக்கலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆளுநர் ஒதுங்கிக் கொண்டார். 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் இது தவறு என்பதைத் தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
தண்டிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக் குறைப்பு தொடர்பாக, மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி எத்தகைய முடிவை எடுக்கவும், 161-வது பிரிவின்படி ஆளுநருக்கு எல்லையில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையும் 161-வது பிரிவின்படிதான் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 161-வது பிரிவு என்பது முழுக்க முழுக்க ஆளுநரின் அதிகாரம் சம்பந்தப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுநர்தான் முடிவெடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து குடியரசுத் தலைவர் முடிவுக்கு அனுப்பிவைத்தது சரியல்ல.
7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது ஆளுநர் எப்போது முடிவெடுப்பார்? என்பது எவருக்குமே விடை தெரியாத வினா ஆகும். அதனால், 7 தமிழர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. அது 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தும்.
கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ள நிலையில், 7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரை மீண்டும் வலியுறுத்துவதே சாதகமான தீர்வாகும்.
எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி, 7 தமிழர்களை விடுதலை செய்யும்படி பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT