Published : 06 Aug 2021 10:11 AM
Last Updated : 06 Aug 2021 10:11 AM

ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய கோரி சு.வெங்கடேசன் கடிதம்: மத்திய அமைச்சர் பதில்

சு.வெங்கடேசன் எம்.பி: கோப்புப்படம்

சென்னை

ராம்கோபால் ராவ் குழுவின் அறிக்கையை நிராகரித்து ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என, மக்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (ஆக. 06) தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"ஐஐடி இட ஒதுக்கீடு மீறல்கள் குறித்த பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இட ஒதுக்கீட்டின் முறையான அமலாக்கம் பற்றி பரிசீலிப்பதற்காக, டெல்லி ஐஐடி இயக்குநர் ராம் கோபால் ராவ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடலாம்; முனைவர் பட்ட அனுமதியில் கட்டாயமானதாக இருக்க வேண்டியதில்லை; மாணவர் அனுமதியில் நன்றாகவே அமலாகிறது என்ற வகையில், அறிக்கையை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை குறித்து தொடர்ந்து கடிதங்களையும், நாடாளுமன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறேன்.

மார்ச் 8, 2021-ல் நான் எழுதிய கடிதத்தில் ராம் கோபால் ராவ் குழு தனக்கு இட்ட பணியை செய்யாமல், வரம்பு மீறி எதிர்மாறான வேலையை செய்திருக்கிறது. ஆகவே, உடனடியாக அந்த அறிக்கையை நிராகரித்து, இட ஒதுக்கீட்டு அமலாக்கத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இருந்தேன்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்: கோப்புப்படம்

அந்த நிபுணர் குழு அறிக்கையை ஐஐடி நிலைக் குழு பரிசீலிப்பதாக முதலில் பதில் வந்தது. ஐஐடி நிலைக் குழுவும் தனது எல்லைகளை மீறிவிடக் கூடாது என்று அறிவுறுத்துமாறு வலியுறுத்தி இருந்தேன்.

அதற்கான 02.08.2021 தேதியிட்ட பதில் கடிதம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இடம் இருந்து வந்துள்ளது.

ஐஐடி நிலைக் குழுவுக்கு எனது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அக்கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை கவனத்தில் எடுத்திருப்பதாகவும், நிலைக் குழுவும் தனது பரிந்துரைகளை இறுதி செய்து அனுப்பும் போது இக்கருத்துக்களை கணக்கில் கொள்ளுமென்றும் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதன் அமலாக்கம் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த கல்வியாண்டும் கடந்து போய் விடக் கூடாது. சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் கைவசமாக வேண்டும். ஆசிரியர் நியமனம், மாணவர் அனுமதி இரண்டிலுமே".

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x