Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM
தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் 8 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை தொடர் பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நஜிமுதீன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆனந்தகுமார், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ராஜாராமன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குநர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய ஸ்மார்ட் கார்டுகளை பயனாளி களுக்கு வழங்கினார். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அர.சக்கரபாணி கூறும்போது, ‘‘திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்துக்கு 4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதை 99.5% மக்கள் பெற் றுள்ளனர். குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் 15 நாட்களில் வழங்க முடிவெடுக்கப்பட்டது. 7 லட்சம் மனுக்கள் வரப்பெற்று இதுவரை 3.5 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 3 லட்சம் பேர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரம் குடும்ப அட்டைகள் இருக்கும் ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 5,500 ஆக உள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் 102, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 64, திருப்பத்தூர் மாவட்டத்தில் 64 கடைகள் உள்ளன. இதை பிரித்து புதிய கடைகள் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் 8 ஆயிரம் ரேஷன் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படும் புகார் தொடர்பாக கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட 1.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது. அதை கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பான டெண்டரும் வெளியிடப்பட் டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT