Published : 05 Aug 2021 09:25 PM
Last Updated : 05 Aug 2021 09:25 PM
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்திட தமிழ்நாடு அரசு உடனே அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் புதிதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அமைச்சரவைகூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூறினர்.
அதனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததார்.
இதனை நீதிமன்றத்தில் ஆளுநர் தனது பதிலாக தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநரின் இச்செயல் மாநில அரசையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும் என்று சட்ட வல்லுநர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 03.08.2021 அன்று 'ஹரியானா-எதிர்- ராஜ்குமார்' என்ற வழக்கில் மிகத் தெளிவான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டது.
அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 161-இன் படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவு என்பது அரசின் முடிவுதானே தவிர ஆளுநரின் முடிவு அல்ல. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநரின் ஒப்புதலானது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு சடங்கு மட்டுமே என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், " அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் -161 இன் கீழும் தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தமிழ்நாடு அரசுக்கு அளித்த மனுவின் மீது மாநில அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, இதனடிப்படையிலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகளின்படியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்திட தமிழ்நாடு அரசு உடனே அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் புதிதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT