Published : 05 Aug 2021 07:55 PM
Last Updated : 05 Aug 2021 07:55 PM
அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பின் மெல்ல உடல்நலம் தேறினார். பின், கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று (ஆக. 05) மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது :
அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
14 வயது முதலே பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த மதுசூதனன், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் போற்றும் தலைவராகத் திகழ்ந்தவர் ஆவார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயர்ந்த குணமும், அமைதியும், இயல்பிலேயே கொண்டிருந்த தலைவராக அவர் திகழ்ந்தார்.
மாநில அரசின் கைத்தறித் துறை அமைச்சராகவும் அதிமுகவின் அவைத் தலைவராகவும் அவர் ஆற்றிய பணிகள் தமிழக வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கும் என்பது உறுதி.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT