Published : 05 Aug 2021 03:02 PM
Last Updated : 05 Aug 2021 03:02 PM
புதுச்சேரியில் பதிவு செய்யாத, கேளிக்கை வரி செலுத்தாத கேபிள் டிவி நிறுவன இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி குழுவினர் மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு கேபிள் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பு இணைப்பு வழங்கப்பட்டு, பல்வேறு சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இதற்காக ரூ. 200 முதல் மாதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே புதுச்சேரியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு விதிகள் படி புதுச்சேரி நகராட்சியில் பதிவு செய்யாமலும், கேளிக்கை வரி செலுத்தாமலும் நீண்டகாலமாக இருந்து வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எவரும் நகராட்சியில் பதிவு செய்யவில்லை. கேளிக்கை வரியும் செலுத்தவில்லை. இது குறித்து அவர்களுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கேளிக்கை வரி செலுத்தாத நபர்கள் மீது இணைப்பு துண்டிப்பு மற்றும் ஒளிபரப்பு சாதனங்கள் ஜப்தி நவடிக்கை ஆக.5 முதல் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் அவர்கள் நகராட்சிக்கு கேளிக்கை வரி செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து கேபிள் டிவி கேளிக்கை வரி செலுத்தாத, பதிவு செய்யாத கேபிள் ஆபரேட்டர்களின் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் இன்று (ஆக. 5) மேற்கொண்டனர்.
இதன்படி முதல் கட்டமாக ரூ. 1 கோடி 2 லட்சம் அளவில் கேளிக்கை வரி நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைப்புகளை துண்டித்து, அவர்கள் பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வகையில் 6 கேபிள் டிவி நிறுவனங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பதிவு செய்யாத, வரி செலுத்தாத கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT