Published : 05 Aug 2021 02:18 PM
Last Updated : 05 Aug 2021 02:18 PM
தற்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழக, இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் 78-வது தொடக்க விழா இன்று (ஆக.5) ஹைதரபாத்தில் நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைய வழியாக விழாவில் கலந்துகொண்டார்.
இதில் அவர் பேசியதாவது:
‘‘அறிவியலும், தொழில்நுட்பமும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்காற்றி வருகின்றன. பன்னெடுங் காலமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. கணிதம், வானியல், மருத்துவம், இயற்பியல், வேதியியல் இன்னும் பல துறைகளில் இந்தியா படைத்துள்ள சாதனைகளால் அறிவியல் துறை பெரிதும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
நம்முடைய பெருமையையும், அறிவியல் துறைகளில் நாம் படைத்திருக்கும் சாதனைகளையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டிய தருணம் இது. இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறைசாற்ற வேண்டும். அதற்கான தகுதியும், திறமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார். மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கும் நிலைமையைக் குறைக்கும் நோக்கத்தோடு “ஆத்ம நிர்பார் பாரத்“ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் விளைவாக, உள்நாட்டிலேயே கரோனா பொருந்தொற்றுக்கு எதிராக நாம் தடுப்பூசிகள் கண்டறிந்து இருப்பதே இதற்கு ஆதாரம்.
நாட்டில் இதுவரை 47 கோடி மக்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசிகளை உருவாக்கியதில் இந்திய வேதியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்களிப்பை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
தற்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியம். விஞ்ஞானிகளும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக அறிவியல் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். பல்துறை ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்.
21-ம் நூற்றாண்டுக்கான கல்வியை அளிக்கும் நோக்கத்தோடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவை ஒரு அறிவு சார்ந்த வல்லரசாக மாற்றுவதே இதன் நோக்கம்.’’
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment