Published : 05 Aug 2021 01:10 PM
Last Updated : 05 Aug 2021 01:10 PM
ஆகஸ்ட் 23 முதல் 27 வரை தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இன்று (ஆக. 05) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் முத்தரசன் தலைமையில், நேற்று (ஆக. 04) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.பழனிசாமி, நா.பெரியசாமி, பி.பத்மாவதி, எம்.ஆறுமுகம் மற்றும் டி.எம்.மூர்த்தி, க.சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியுள்ள போதிலும், ஆளும் பாஜக ஜனநாயக நெறிமுறைகளையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் நிராகரித்து, அவை நடவடிக்கைகளை முடக்கி வைத்துள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கும், சுயசார்புக்கும் பேராபத்தாக எழுந்துள்ள குடிமக்களின் குறிப்பாக எதிர்க்கட்சிகள், படைப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், நீதித்துறை உள்ளிட்ட அறிவுத் துறையினரின் அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக் கேட்டு வரும் பெகாசஸ் செயலி விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள், நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் விலை உயர்வு, ஒன்பது மாதங்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்தல், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம், நோய்த் தொற்றுப் பரவல் நெருக்கடி கால ரொக்கப் பண உதவி செய்ய வேண்டியதன் அவசியம் போன்ற மிக முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க அனுமதிக்க மறுக்கும் பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் விவசாயிகள் விரோத, வேளாண் வணிகச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தவும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்துதல் - எளிமையாக்குதல்) சட்டம் 2019 ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரியும், வரும் 23.08.2021 முதல் 27.08.2021 (திங்கள் முதல் வெள்ளி வரை) தமிழகம் முழுவதும் ஊராட்சிகள் தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்துவது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் முடிவு செய்துள்ளது.
இத்தகைய மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பொது ஊரடங்குக்கு உட்பட்டு, முகக்கவசம் அணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT