Last Updated : 13 Feb, 2016 04:03 PM

 

Published : 13 Feb 2016 04:03 PM
Last Updated : 13 Feb 2016 04:03 PM

மலைப் பிரதேசங்களில் விளையும் பயிர்களை சாகுபடி செய்து அசத்தும் புதுச்சேரி விவசாயி

மலைப் பிரதேசங்களில் விளையும் குளிர்கால பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதோடு, பிற விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் மண்ணாடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன்.

புதுச்சேரி மாநிலத்தில் குறைந்தளவே விவசாய பரப்பு உள்ளது. குறுகிய இடத்திலும் பலர் ஆர்வத்துடன் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக பாகூர் பகுதி புதுச்சேரியின் நெற் களஞ்சியம் என அழைக்கப்படும் சிறப்புடையது. பாரம்பரியமாக பயிரிடப்படும் நெல், கரும்பு, வாழை போன்றவை இப்பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்படு கின்றன. மேலும் வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, தினை உள்பட பல பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. வேளாண் துறையின் தொடர் முயற்சியால் தோட்டக் கலை பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மலைப் பிரதேசத்தில் விளையும் காலி பிளவர், பீன்ஸ், முட்டைகோஸ், நூல்கோல், பீட்ரூட் போன்றவற்றை புதுச்சேரியிலும் சாகுபடி செய்ய முடியும் என்பதை மண்ணாடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன் நிரூபித்துள்ளார். அதோடு பிற விவசாயிகளின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து அசத்தி வருகிறார்.

இதுபற்றி விவசாயி த.ஆதிநாரா யணன் “தி இந்து”விடம் கூறும்போது, “நெல், கரும்பு, மணிலா போன்றவற்றை எனது தாத்தா காலத்தில் இருந்து நிலத்தில் பயிரிட்டு வந்தேன். விவசாயம் தொடர்பாக புதுச்சேரி வேளாண்துறை மூலம் விவசாயி களுக்கு பயிற்சி அளித்து சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அது போல் நான் பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு சென்றேன். அங்கு புதுச்சேரியில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவை 3 போகங்கள் பயிரிடுவது போல, அவர்கள் கேரட், காலி பிளவர், பீன்ஸ், போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அதை பார்த்தபோது அவற்றை பயிரிட வேண்டும் என்ற மாற்று சிந்தனையும், ஆர்வமும் வந்தது. இதையடுத்து அங்குள்ள விவசாயிகளிடம் பயிரிடும் முறைகள் குறித்து கேட்டறிந்தேன். பின்னர், ஓசூரில் இருந்து விதைகள் வாங்கிவந்து கடந்த ஆண்டு பனிக்காலமான நவம்பர், டிசம்பரில் காலி பிளவர், முட்டைகோஸ் ஆகியவற்றை சோதனை செய்து பார்ப்பதற்காக பயிரிட்டேன். அதில் நல்ல லாபம் கிடைத்தது.

காலி பிளவர், முட்டைகோஸ் 3 மாத பயிர்கள், வேலையும் குறைவு. 1 கிலோ விதை ரூ.2 ஆயிரம் மட்டுமே. எனவே, தொடர்ந்து இதுபோன்ற பயிர்களை பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இதனால், எனக்கு சொந்தமான நிலம் முழுவதும் நூல்கோல், பீன்ஸ், பிரெஞ்ச் பீட்ரூட் போன்றவற்றை பயிரிட்டுள்ளேன்.

இதில் நடப்பாண்டில் முதன் முதலாக நூல்கோல் பயிரிட்டேன். இது ஊடுபயிர் என்பதால் வெண்டை, காலி பிளவர் போன்ற பயிர்கள் பயிரிட்டுவிட்டு நூல் கோலை பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை மட்டுமே செலவானது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை லாபம் கிடைத்தது.

நெல், கரும்பு பயிர்களை ஒப்பிடும்போது, குளிர்கால பயிருக்கான செலவு குறைவு, லாபமும் அதிகம். இதனால், எனக்கு சொந்தமான நிலம் முழுவதும் குளிர்கால காய்கறிகளை பயிரிட் டுள்ளேன். அடுத்த ஆண்டு சவ்சவ் பயிரிட உள்ளேன்.

நூல்கோல், காலி பிளவர், பீட்ரூட் போன்ற பயிர்கள் பயிரிடுவது மிகவும் எளிமையானது. இந்த பயிர்களை பயிரிடுமாறு தனக்கு தெரிந்த விவசாயிகளிடமும் கூறி வருகிறேன். நூல்கோல் போன்ற பயிற்களை பெரிய சந்தைகளில் விற்பனை செய்வதில் போதிய வசதி இல்லாததால் சிறிய சந்தைகளில் விற்பனை செய்து வருகிறேன். பெரிய அளவில் சந்தைபடுத்த விவசாயிகள் இதுபோன்ற பயிர்களை பயிரிட முன்வர வேண்டும். அரசும் போது மான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மலைப்பிரதேசத்தில் வளரும் இந்த காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது மண் ணாடிப்பட்டில் விளைந்துள்ள குளிர்கால காய்கறிகளை விவ சாயிகள் நேரடியாக பெற்று குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.

இவரைப் போல மற்ற விவசாயி களும் குளிர்கால காய்கறி களை பயிரிட முன்வந்தால் புதுச்சேரி மக்களுக்கு குறைந்த விலையில் காலி பிளவர், பீன்ஸ், முட்டைகோஸ், நூல்கோல், பீட்ருட் ஆகியவை கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x