Last Updated : 04 Aug, 2021 07:19 PM

1  

Published : 04 Aug 2021 07:19 PM
Last Updated : 04 Aug 2021 07:19 PM

கோவையில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள்: மாவட்ட ஆலோசனை மையம் மீட்பு

கோவை

கோவையில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மீட்க மாவட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இதுவரை 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் என 200-க்கும் மேற்பட்டோர் மீண்டுவர உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்டப் புகையிலைக் கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் எம்.சரண்யாதேவி கூறியதாவது:

''அரசு மருத்துவமனையின் நுரையீரல், பல் மருத்துவம், பொது மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகள், மாணவர்களுக்கு இங்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டும், சிலர் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வருவார்கள். அதுபோன்றவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, பழக்கத்தைக் கட்டுப்படுத்துகிறோம்.

பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை கூல்லிப் எனப்படும் புகையிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். புகை பிடித்தாலோ, மற்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்தினாலோ வாசனையை வைத்து பெற்றோர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், வாயில் அடக்கி வைத்துக்கொள்ளும் கூல்லிப் புகையிலையை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பழக்கம் எப்படி வருகிறது?

பெரும்பாலான மாணவர்களுக்கு வயதில் மூத்த நண்பர்கள் மூலமாகவே புகையிலைப் பொருட்கள் அறிமுகம் ஆகின்றன. சிலர் தந்தையிடம் இருந்து இந்தப் பழக்கத்தைத் தெரிந்துகொள்கின்றனர். கூல்லிப் போன்றவற்றை மெல்லும்போது பாடங்களை அவர்களால் கவனிக்க முடியாது. மந்த நிலைக்குச் சென்றுவிடுவார்கள். புகையிலைப் பொருளை வாங்க வீட்டில் பணம் கிடைக்காதபோது பணத்தைத் திருடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து விலகியே இருக்கின்றனர். நாளடைவில் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகவும், புகையிலைப் பொருட்கள் காரணமாகின்றன.

இதனால், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், காசநோய், உளவியல் பாதிப்பு, கண்பார்வைத் திறன் குறைவு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. எனவே, பாதிப்புகளின் தன்மையை மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறோம். இதுபோன்று, புகையிலைப் பழக்கத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆலோசனை மையத்தை அணுகினால் மீண்டுவர வழிவகை செய்யப்படும்''.

இவ்வாறு டாக்டர் எம்.சரண்யாதேவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x