Published : 04 Aug 2021 03:48 PM
Last Updated : 04 Aug 2021 03:48 PM

அப்போலோ மருத்துவமனையில் மிட்ரா கிளிப் பொருத்துதல்: 41 வயது விவசாயிக்கு வெற்றிகரமாக சிகிச்சை

41 வயது விவசாயிக்கு வெற்றிகரமாக சிகிச்சை.

சென்னை

அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மிட்ரா கிளிப் பொருத்துதல் சிகிச்சை 41 வயது விவசாயி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் இன்று (ஆக. 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"அப்போலோ மருத்துவமனைகள் குழுமம், மிட்ரா கிளிப் பொருத்துதல் எனும் அரிய அறுவை சிகிச்சை மூலம் 41 வயதான ஆண் விவசாயி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அந்த நோயாளி, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் மூன்று மாதங்களுக்கு மேலாகக் காத்திருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக மிட்ரா கிளிப் பொருத்தி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்.

இந்த சிகிச்சை முறைக்குப் பிறகு சில நாட்களுக்குள் நோயாளி தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பினார். மேலும், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை கூட தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி இதுகுறித்துக் கூறுகையில், ''இந்தியாவில் மிட்ரா கிளிப் செயல்முறையை மேற்கொள்ள அங்கீகாரம் பெற்ற சில மருத்துவமனைகளில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் ஒன்றாகும். இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது பலருக்கு நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது. இது புதிய திறனையும் மகிழ்ச்சியையும் எங்களுக்கு அளிக்கிறது.

இதய நோயாளிகளில் கடுமையான / இறுதி நிலை இதய செயலிழப்பு ஏற்படுபவர்கள் 10 சதவீதம் வரை உள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு பாலமாக மிட்ரா கிளிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் அறுவை சிகிச்சை மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

அத்துடன், இதய மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சில சமயங்களில் அதற்கான தேவையை இல்லாமல் ஆக்கக்கூடிய செயல்பாட்டு மேம்பாடுகளுக்குக் கூட இந்த மிட்ரா கிளிப் வழிமுறை வழிவகுக்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மூன்று மாதங்களுக்கும் மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த 41 வயது ஆண் நோயாளிக்கு மிட்ரா கிளிப் மூலம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அதன் பலன்களை நிரூபித்துள்ளதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இந்த சிகிச்சை முறையின் வெற்றி, இந்த அதிநவீன மற்றும் புரட்சிகர மருத்துவ முறையை, தேவைப்படும் மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது. இதுபோன்ற சிக்கலான சிகிச்சைகளில் பெரும்பாலானவை கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு உச்சத்தில் இருந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.

கடுமையான தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகள் காரணமாகவும், அப்போலோ மருத்துவமனையில் கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகளைப் பிரித்து மிகக் கடுமையான, இரும்புத் திரை போன்ற தொடர்பில்லாத வழிமுறைகளை மேற்கொண்டதன் காரணமாகவே இவை சாத்தியமாகி உள்ளன'' என்றார்.

இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பட்டியலில் இருந்த தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் குறித்த சர்வதேச தகவல் அடிப்படையில், மிட்ரா பிரிட்ஜ் பதிவேட்டில் 119 நோயாளிகளின் தரவுகளின் அடிப்படையில் 87.5 சதவீதம் இந்த சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் 30 நாள் வரையிலான சிகிச்சை வெற்றி 100 சதவீதமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ் கூறுகையில், ''மிட்ரா கிளிப் என்பது பாலியஸ்டர் துணியுடன் கூடிய ஒரு சிறிய உலோகக் கிளிப் ஆகும். இது கசிந்த மிட்ரல் வால்வைச் சரிசெய்து அதன் மூலம் ரத்த ஓட்டம் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்கிறது. இது இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறையாகும்.

மிதமானது முதல் கடுமையான அல்லது சற்று கடுமையான மற்றும் இரண்டாம் நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு மிட்ரல் வால்வு மறுசீரமைப்பு சிகிச்சையில் முன்னேற்றம் அடையாத நிலை இருந்தால் இந்த குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறையைத் தேர்வு செய்யலாம். இது அவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கும்'' என்றார்.

''மூன்று ஆண்டுகளாக நாங்கள் இந்த நடைமுறையைப் பொருத்தமான நோயாளிகள் என்று நினைக்கும் நோயாளிகளுக்குச் செய்து வருகிறோம். இந்த சிகிச்சை நடைமுறைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதுடன் வாழ்க்கைத் தரத்தில் நம்பமுடியாத முன்னேற்றங்கள் ஏற்படுவதை நாங்கள் காண்கிறோம்.

இந்த சிகிச்சைப் பிரிவில் நாங்கள் பெற்றுள்ள சிறந்த அனுபவம் காரணமாக அது பல மைல்கற்களை அடைய எங்களுக்கு உதவியுள்ளது. கோவிட் - 19 தொற்றுநோயின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நேரத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு நோயாளிகளுக்கு அடுத்தடுத்து மிட்ரா கிளிப் பொருத்தப்பட்டது.

இன்று, இந்தப் பிரிவில் நாங்கல் மிக முக்கிய நிலையில் இருக்கிறோம்; இன்றுவரை இந்தியாவில் பொருத்தப்பட்ட அனைத்து மிட்ரா கிளிப்களிலும் 70 சதவீதம் வரை அப்போலோ மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நாங்கள் செல்லும் இந்தப் பயணத்தில் பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க மைல் கற்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்'' என்று சாய் சதீஷ் மேலும் கூறினார்.

மிட்ரா கிளிப் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் மிட்ரா கிளிப் 2003-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்குப் பொருத்தப்பட்டது. இந்த மருத்துவ நடைமுறை நோயாளிகளின் வாழ்வில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சிகிச்சை நடைமுறையாக உள்ளது.

2008-ம் ஆண்டு ஐரோப்பாவிலும் 2013-ம் ஆண்டில் அமெரிக்காவிலும் இது வணிக ரீதியாகக் கிடைக்கத் தொடங்கியது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மிட்ரா கிளிப் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிட்ரா கிளிப் உள்வைத்துப் பொருத்தப்படுவதன் மூலம் வழக்கமான ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இயலாத பலவீனமான மற்றும் வயதான நோயாளிகளுக்கு இந்த நடைமுறை ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறது.

குறைந்தபட்ச ஊடுருவல் மிட்ரா கிளிப் சிகிச்சை செயல்முறையானது, செயல்பாட்டு முறைகள் மற்றும் மிட்ரல் மறுசீரமைப்பு இரண்டிலுமே பயனுள்ளதாக அமையும். இந்த செயல்முறை ஒரு கேத் ஆய்வகத்தில் கவனத்துடன் செய்யப்படுகிறது. இந்த சாதனம் அகற்றக்கூடியது மற்றும் மாற்றக்கூடியதாகும்.

இந்த முக்கியமான அம்சங்கள் இந்த நடைமுறையின் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. யாருக்கு இந்த சிகிச்சை சரியாக அமையும் என்ற அடிப்படையில் நோயாளியைத் தேர்வு செய்வது, சிகிச்சையில் வெற்றியை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.

வழக்கமான அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், மிட்ரா கிளிப் செயல்முறைக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இது நீண்ட காலத்துக்குப் பயன் அளிக்கக்கூடியது மற்றும் சிக்கனமான மருத்துவ சிகிச்சை முறையாகவும் இருக்கிறது. அத்துடன் நோயாளிகள் மிகக் குறுகிய காலத்தில் குணமடைந்து இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியும்.

மிட்ரா கிளிப் பற்றிய இந்தியாவின் முதல் இரண்டு அறிவியல் ஆய்வுத் தகவல் அறிக்கைகளும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது அறிக்கை முதல் சிகிச்சை பற்றியதாகும்.

அடுத்த அறிக்கை ஒராண்டு தொடர் நடைமுறைகளுக்குப் பின் முதல் ஏழு சிகிச்சைகளில் கிடைத்த சிறந்த விளைவுகளைக் எடுத்துக் காட்டும் வகையில் வெளியிடப்பட்டது. அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சாய் சதீஷ், மிட்ரா கிளிப் உள்வைப்பு சிகிச்சைகளுக்கான ஏபிஏசி வழிகாட்டுதல்களை வெளியிடும் ஆசிரியர் குழுவின் பணியில் ஈடுபட்டுள்ள ஒரே இந்தியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தியரி எனப்படும் பாடத்திட்ட அடிப்படையிலான மற்றும் நான்கு நேரடி சிகிச்சைகள் அடங்கிய ஆசியாவின் முதல் மிட்ரா கிளிப் பயிற்சித் திட்டமும் அப்போலோ மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்டது. இது இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி எனப்படும் இடையீட்டு இதயவியல் துறையில் சிறப்பான மையமாக அப்போலோ திகழ்வதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது".

இவ்வாறு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x