Published : 04 Aug 2021 03:15 PM
Last Updated : 04 Aug 2021 03:15 PM

பெருமாள் கோயில் செப்புத் தகடுகள்; அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயிலில் காணாமல் போனதாக கூறப்படும் செப்புத் தகடுகள் புராதான பொருளாக அறிவிக்கப்பட்டு, நாகை மாவட்டம் அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

இது தொடர்பாக, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ண மங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று எனவும், இக்கோயிலுக்கு சொந்தமாக 400 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோயிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து எல்லை வரையறை செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய கோயில் தனி அலுவலர் உத்தரவிட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நிலங்களை மீட்பதுடன், கோயிலில் இருந்து மாயமான செப்புத் தகடுகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும், அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காணாமல் போனதாக கூறப்படும் செப்புத்தகடுகள் எங்கு உள்ளது என்பது குறித்து, இன்று (ஆக. 04) தெரிவிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காணாமல் போனதாக கூறப்படும் செப்புத் தகடுகள், புராதான பொருளாக அறிவிக்கப்பட்டு, நாகை மாவட்டம் அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, 5 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏழு வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x