Published : 04 Aug 2021 12:22 PM
Last Updated : 04 Aug 2021 12:22 PM
தமிழக பட்ஜெட் தொடர்பாக, அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறும் என, பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, முந்தைய அதிமுக அரசு தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. தேர்தலில் வெற்றி பெற்று தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
இந்த ஆண்டு, பரிட்சார்த்தமாக காகிதமில்லா இ-பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதுதவிர, இந்த ஆண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், துறைவாரியாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தற்போது பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ஆக.13-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 13-ம் தேதி தாக்கல் செய்தபின் இரு தினங்கள் சனி, ஞாயிறு (சுதந்திர தினம்) விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமை ஆக.16 முதல் 4 அல்லது 5 நாட்கள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர, தமிழக அரசு ஏற்கெனவே தற்போதைய நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அறிவிக்கப்பட்ட முந்தைய காலங்களில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவுகள், பல திட்டங்களுக்காகத் தேவைப்படும் நிதி, அவற்றைத் திரட்ட எடுத்துக் கொள்ளப்படும் காலம், எதனால் தாமதம், குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக பட்ஜெட் தொடர்பாக, இன்று காலை (ஆக. 04) 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக அமைச்சரவையின் 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் தேதி உள்ளிட்ட முக்கியத் தேதிகள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும், பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள், துறைகள் வாரியாக புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கும் வெள்ளை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில், அவற்றுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதுதவிர, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT