Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM

செங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

செங்கல்பட்டு

ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் மாதம்15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அதனுடன் இணைந்திருந்த 9 மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளும் தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஊராட்சி அளவில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 8 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு 154ஒன்றிய கவுன்சிலர்கள், 16மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல் 359 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 2,679 வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் தலா 4 வாக்குகளை அளிக்க வேண்டும். ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஊரக தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. வாக்குச்சீட்டு முறைப்படியே தேர்தல் நடத்தப்படும்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்தலை நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் எல்லாநிலையிலும் தயாராக உள்ளது.மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது முதல் கட்டமாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைக் கொண்டு ஊரகப் பகுதிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிநடைபெற்றது. இந்த பணி ஓரிருநாட்களில் முடிவடையும். பின்னர்ஆன்லைனில் பட்டியல் பதிவேற்றப்படும். வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்து அரசியல் கட்சிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

தற்போது கரோனா தொற்றுபரவுவதால் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு திருத்தங்கள் இருப்பின் அவை சரி செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x