Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM
மதுரை பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ‘மல்டிலெவல் பார்க்கிங்குகள்’ வணிக ரீதியில் அமைக்கப்பட்டுள்ளதால், இவை செயல்பாட்டுக்கு வந்தாலும் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தகமும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டே நடைபெறுகிறது. ஆனால், இங் குள்ள பெரும்பாலான நிறுவ னங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாது வாடிக்கையாளர்களுக்கும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவில்லை. சில மிகப்பெரிய நிறுவனங்கள், பெயரளவுக்கு கீழ் தளங்கில் பார்க்கிங் அமைத்துள்ளன. அதில் 20-க்கும் குறைவான கார்களை மட்டுமே நிறுத்த அனுமதிக்கின்றன. இரு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்கள் சாலையில் நிறுத்திவிட்டுதான் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் நெரிசலால் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் முன்பு போல் வியாபாரம் இல்லை என்கிறார்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் அருகே இரு ‘மல்டி லெவல் பார்க்கிங்’குகளை அமைக்கிறது. ஆனால் இவை வணிக நோக்கில் ஏராளமான கடைகளுடன் அமைக்கப்படுவதால் இவற்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை என்று கூறப் படுகிறது.
இதுகுறித்து கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த ராஜ் கூறுகையில், ‘‘பெரியார் பஸ் நிலைய மல்டிலெவல் பார்க்கிங்கில் 4,865 இருசக்கர வாகனங்களும், 371 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் அருகே அமையும் மல்டிலெவல் பார்க்கிங்கில் 1,401 இருசக்கர வாகனங்களும், 110 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம்.
ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், அதனை சுற்றியுள்ள வணிக வீதிகளிலும் தின மும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தையும் மீனாட்சி அம்மன் கோயில் மல்டிலெவல் பார்க்கிங்கில் நிறுத்த முடியாது.
அதுபோல், பெரியார் பஸ்நிலையத்தில் 416 கடை கள் அமையவுள்ளன அந்த கடைகளுக்கு வருவோர், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அங்கு நிறுத்த முடியும். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், சுற்றுலாப் பயணிகளின் வாக னங்களை நிறுத்துவதற்கு இந்த பார்க்கிங்குகளில் போதுமான இட வசதியில்லை.
அதனால் இவை செயல்பாட் டுக்கு வந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதி களில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்பில்லை.
மல்டிலெவல் பார்க்கிங்குகளில் வாகனங்களை பார்க்கிங் செய் வதற்கு மட்டுமே அனுமதித்து இருக்க வேண்டும். ஆனால், வணிக நோக்கில் அமைத்திருப்பது நெரிசலைக் குறைப்பதாக இல்லை.
எனவே தொலைநோக்கு பார்வையுடன் நகரின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல இடங்களில் பார்க்கிங் வசதி
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மல்டிலெவல் பார்க்கிங்குகளில் வாகனங்கள் வருவதும், செல் வதுமாக இருக்கும். மேலும் தமுக்கத்திலும் தற்போது பார்க் கிங் அமைக்கப்படுகிறது. இதே போல் நகரின் பல இடங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் பார்க் கிங் பிரச்சினையால் ஏற்படும் நெரி சல் வருங்காலத்தில் ஏற்படாது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT