Last Updated : 03 Aug, 2021 07:14 PM

2  

Published : 03 Aug 2021 07:14 PM
Last Updated : 03 Aug 2021 07:14 PM

கோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம்

கோவையில் சொகுசுப் பேருந்து என்றுகூறி கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் சிவப்பு நிற அரசு நகரப் பேருந்துகள். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

கோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி நகரப் பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் கட்டணம் வசூலித்துவருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட தகவலில் உறுதியாகியுள்ளது.

கோவையில் தற்போது சாதாரணக் கட்டணப் பேருந்துகள், சிவப்பு நிற சொகுசுப் பேருந்துகள் என இருவகை கட்டணத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாதாரணப் பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இதே, சொகுசுப் பேருந்தில் ரூ.11 வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாதாரணப் பேருந்துகளுக்கான கட்டணத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வட்டாரப் போக்குவரத்து ஆணையரான (ஆர்டிஏ) மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில், அனுமதி இல்லாமல் விதி மீறி சொகுசு என்ற பெயரைப் பயன்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகத் தொடர் புகார்கள் எழுந்துள்ளன. சொகுசு எனக் கூறப்படும் சிவப்பு நிறப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கவும் அனுமதி இல்லை.

சொகுசுப் பேருந்துகளே இல்லை

இது தொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது:

”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பெறப்பட்ட பதிலில், ‘கோவையில் இயக்கப்படும் 640 நகரப் பேருந்துகளில் எதுவும் சொகுசுப் பேருந்து இல்லை’ என அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (வணிகம்) பதில் அளித்துள்ளார். இருப்பினும், சொகுசு என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் அரசுப் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி அறிக்கை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு அபராதம் விதிக்கும்போதெல்லாம் அதைச் செலுத்திவிட்டு தொடர்ந்து தினந்தோறும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் போதவில்லையெனில், அதை உயர்த்திக்கொள்ள முறைப்படி ஆணை பெற வேண்டும். அதைவிடுத்து, விதி மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால், அன்றாடம் கூலி வேலைக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஏழைமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்”.

இவ்வாறு கதிர்மதியோன் தெரிவித்தார்.

விதிமீறிய செயல்

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, "புகாரின் அடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவையில் சோதனை மேற்கொண்டதில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 17 அரசுப் பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்துகளுக்கான அபராதத் தொகையை ஆட்சியர் முடிவு செய்வார். அரசு நகரப் பேருந்துகளில் சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளை மீறுவது ஆகும். அதனால்தான் அபராதம் விதிக்கப்படுகிறது" என்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, “அனுமதிக்கப்பட்ட கட்டணத்தைவிட அரசு நகரப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவறு. அவ்வாறு விதிமீறும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர் விதிமீறல்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x