Published : 03 Aug 2021 06:39 PM
Last Updated : 03 Aug 2021 06:39 PM

வெறிச்சோடிய மதுரை பாரம்பரிய புத்தகக் கடைகள்: கரோனாவுக்குப் பிறகு நலிவடைந்த புத்தக வியாபாரம்

மதுரை

கரோனாவுக்குப் பிறகு பழம்பெருமை வாய்ந்த புதுமண்டபத்தில் உள்ள பாரம்பரியப் புத்தகக் கடைகளில் புத்தக விற்பனை பெருமளவு குறைந்தது. வாடிக்கையாளர்கள் வராமல் மதுரை, புதுமண்டபத்தில் உள்ள கடைகள் வெறிச்சோடிக் காணப்படுவது வாசிப்புப் பழக்கத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு எத்தனை வரலாற்றுப்பெருமைகள் இருக்கிறதோ, அதுபோல் அதன் எதிரே உள்ள புதுமண்டபமும் பல்வேறு பழம்பெருமைகளைக் கொண்டது. முற்றிலும் கல்லால் ஆன இந்த மண்டபம், திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. அவர், கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தில்தான் வசந்த விழா நடத்தி வந்துள்ளார். அதன் காரணமாக இந்த மண்டபம் வசந்த மண்டபம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. சிற்பிகளின் அழகிய சிற்பக் கலை வேலைப்பாடுகளால் உருவான இந்த மண்டபம், தனது பாரம்பரியத்தை இழந்து புதுமண்டபம் என்ற பெயரில் வணிக வளாகமாகச் செயல்படுகிறது. மண்டபத்தின் உள்ளேயும், மண்டபத்தைச் சுற்றிலும் வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். ஆனால், புத்தகக் கடைகள்தான் இந்த மண்டபத்தின் அடையாளம்.

பள்ளிப் பாடப்புத்தகங்கள், கைடுகள், வரலாற்றுப் புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள், அறிவியல் புத்தங்கள் உள்ளிட்ட எல்லாவிதமான புத்தகங்களும் இங்கு கிடைக்கின்றன. குறைந்துவரும் வாசிப்புப் பழக்கத்தால் ஏற்கெனவே பொலிவிழந்து காணப்பட்ட இந்த மண்டபம், கரோனாவுக்குப் பிறகு முற்றிலும் வியாபாரமில்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதுகுறித்துப் புதுமண்டபம் புத்தக வியாபாரி ஆனந்த் கூறுகையில், ''புதுமண்பத்தில் 30 புத்தகக் கடைகள் உள்ளன. ஒரே பகுதியில் இவ்வளவு கடைகள் இருப்பது தென் தமிழகத்திலே இங்குதான். எங்குமே கிடைக்காத புத்தகங்களுக்கு மக்கள் இன்றும் புதுமண்டபத்திற்குத்தான் வருகிறார்கள். நாங்கள், மூன்று தலைமுறைகளாகப் புதுமண்டபத்தில் புத்தகக் கடை வைத்திருக்கிறோம். 90-களில் புதுமண்டபத்தில் புத்தக வியாபாரம் உச்சத்தில் இருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளை அடைக்கவே மாட்டோம்.

அந்த அளவுக்கு நகரவே நேரமில்லாமல் புத்தக வியாபாரம் இருக்கும். தற்போது பள்ளிகள், கல்லூரிகளிலேயே புத்தகங்களை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால், இயல்பாகவே புத்தக விற்பனை குறைந்துவிட்டது. கரோனாவுக்குப் பிறகு மக்களிடம் முற்றிலும் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. கரோனா காலத்தில் எல்லோருக்கும் நல்ல ஓய்வு கிடைத்தும் அதனைப் புத்தக வாசிப்பிற்கு யாரும் பயன்படுத்தவில்லை. மாறாக செல்போன்களில் மூழ்கிவிட்டனர். அதிலிருந்து இந்தத் தலைமுறையினர் தற்போது வரை மீண்டுவரவில்லை.

அதனால், புதுமண்டம் புத்தகக் கடைகளில் புத்தக வியாபாரம் மிக மோசமாகிவிட்டது. பாரம்பரியமாகப் புத்தக வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், தற்போது பெயரளவுக்குக் கடைகளை நடத்திக்கொண்டு, வேறு இடங்களில் மற்றொரு வணிகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி குன்னத்தூர் சத்திரத்திற்கு இடமாற்றம் செய்யப்போகிறார்கள். அதனால், புதுமண்டபத்தின் பாரம்பரியப் புத்தக வியாபாரம் இந்தத் தலைமுறையோடு முடியப்போகிறது'' என்று புத்தக வியாபாரி ஆனந்த் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x