Last Updated : 03 Aug, 2021 02:12 PM

 

Published : 03 Aug 2021 02:12 PM
Last Updated : 03 Aug 2021 02:12 PM

ஆடிப்பெருக்கு: பூட்டிய கோயில்கள் முன்பாக நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

கொடையாஞ்சி பாலாற்றங்கரையில் உள்ள பாலமுருகன் கோயில் முன்பாக நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

திருப்பத்தூர்

கரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் பூட்டிய கோயில் வாசல்களில் நின்று பக்தர்கள் சாமியை வழிபட்டனர்.

ஆடி மாதம் 18-ம் நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று அழைக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கப்படும் பணிகள் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரியில் நீராடி, மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம், சமர்ப்பித்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்நாளில் புதுமணத் தம்பதிகள் ஆற்று நீரில் நீராடி, புதுமணப் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். அதேபோல, விவசாயிகளும் ஆடிப்பெருக்கு நாளில் தங்களது உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாதம் என்பதால் கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்கள் அதிக அளவில் திரண்டால் கரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை உள்ளிட்ட விழாக்களுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரசித்திபெற்ற அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோயில் ஊழியர்கள் மட்டுமே சிறப்புப் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஆடிப்பெருக்கு நாளில் விசேஷமாகக் காணப்படும் வாணியம்பாடி கொடையாஞ்சி பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில், திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை முருகன் கோயில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி முருகன் கோயில், ஆம்பூர் கைலாசகிரி நாதர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள் இன்று களையிழந்து காணப்பட்டன.

ஆடிப்பெருக்கை முன்னிட்டுக் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பூட்டிய கோயில்கள் முன்பாக வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆண்டியப்பனூர் அணைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆற்று நீரில் நீராடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆண்டியப்பனூர் அணைப் பகுதியில் பக்தர்கள் வர முடியாதபடி அங்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x