Published : 03 Aug 2021 12:50 PM
Last Updated : 03 Aug 2021 12:50 PM
திருமாவளவனைத் தான் சோஃபாவில் அமரச் சொன்னதாகவும், ஆனால் அவர் அமரவில்லை எனவும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஜூலை 31-ம் தேதி அவரின் வீட்டுக்குச் சென்றார். அப்போது இருவரும் அருகே அமர்ந்து பேசும் படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் சோஃபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும், சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசினர்.
இந்தப் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளனர். அருகில் அவ்வளவு பெரிய சோஃபா இருந்தாலும், பழைய பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனை அமர வைத்திருப்பது ஏன், சமூக நீதியை முன்வைத்து அரசியல் செய்யும் திராவிடக் கட்சியிலேயே சாதிப் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அதுவும் கூட்டணிக் கட்சியின் தலைவருக்கு இந்த நிலைமையா, இதுதான் திமுக கடைப்பிடிக்கும் சமத்துவமா, 'இப்படியொரு நாற்காலியில் அமரச்சொன்னால், முடியாது எனத் திரும்பிவராமல் அவரும் கைகட்டி அமர்ந்திருக்கிறார்' எனப் பல்வேறு கருத்துகளை தெரிவித்து விமர்சித்தனர்.
இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், "அமைச்சர் ராஜகண்ணப்பன் அருகில் இருக்கும் சோபாவில் அமருங்கள் என 3 முறை கூறினார். அந்த நாற்காலி சற்று இடைவெளியிலும், இடையில் சிலையும் இருக்கிறது. எனவே, இது எனக்கு வசதியாக இருக்கிறது எனக் கூறி, அங்கிருந்த மற்றொரு இருக்கையை நானேதான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். நான் பணிந்துபோய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே.
குதர்க்கவாதிகள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேறு பூச வேண்டும் என நினைக்கிறார்கள். இதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன். என் நலனில் அக்கறை கொண்டவர்கள் விமர்சித்தால் அதற்கு பதில் சொல்வேன்.
மேலும், கைகட்டி உட்காருவது என்னுடைய பழக்கம். என் அம்மா முன்பும், கட்சித் தொண்டர்கள் முன்பும் கை கட்டிக்கொண்டு இருப்பேன். இதையெல்லாம் அரசியல் ஆக்குவது என்பது அவர்களின் இயலாமையைக் காட்டுகிறது" என்றார்.
இந்நிலையில், இன்று (ஆக. 03) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், "இதனை அரசியல் செய்கின்றனர். எப்போதும் அப்படித்தான் உட்கார்ந்திருப்பார். சோஃபாவில் உட்காரச் சொன்னால் உட்காரவில்லை. நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள். அந்தக் காலத்தில் பாயில் அமர்ந்து பேசியிருக்கிறோம். சாதாரண நிகழ்ச்சி அது. அதனைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT