Published : 03 Aug 2021 11:32 AM
Last Updated : 03 Aug 2021 11:32 AM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்றன. முன்னதாக செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி, இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து நேற்று காலை புறப்பட்டு பகல் 12.45 மணிக்குத் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற குடியரசுத் தலைவர், மதிய உணவுக்குப் பின், மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, விழா நடக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றார். 5 மணிக்கு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்கிய நிலையில், இதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், பேரவை அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
இதையடுத்து, நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய குடியரசுத் தலைவர், இன்று (ஆக. 03) காலை தனி விமானத்தில் கோவை புறப்பட்டார். சூலூர் விமானப்படை தளத்தில் இறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டிக்குச் செல்கிறார். ஊட்டி ராஜ்பவனில் 6-ம் தேதி வரை ஓய்வெடுக்கிறார். இடையில், ஒருநாள் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிடுகிறார். ஆக. 6-ம் தேதி அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளம் வந்து, விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT