Published : 09 Jun 2014 10:56 AM
Last Updated : 09 Jun 2014 10:56 AM
‘’திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி இருந்தால் ஒன்றோ இரண்டோ குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன். ஆண்டவனுக்கு அதையும் தாண்டி என்னை மையப்படுத்தி ஒரு நல்ல நோக்கம் இருந்திருக்கிறது. அதனால், 23 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன்’’ நெகிழ்ந்துபோய் பேசினார் மாலதி ஹொல்லா.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி ஏரியாவைச் சேர்ந்தவர் மாலதி ஹொல்லா. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று சிந்திக்கும் நிலையில் ஹொல்லாவின் குடும்பம் இருந்த நிலையில், ஒரு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழே முற்றிலுமாய் செயல்பாட்டை இழந்தார் ஹொல்லா. சென்னை அடையாறில் உள்ள ஆர்த்தொபெடிக் சென்டரில் 15 ஆண்டுகள் சிகிச்சையில் இருந்தார். கிட்டத்தட்ட தனது குழந்தை பருவம் முழுவதையும் சிகிச்சை மையத்தில் தொலைத்த ஹொல்லா, பிற்காலத்தில் அர்ஜுனா விருதை கௌரவிப்பார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
சக்கர நாற்காலியில் நகர்ந்தாலும் தன்னம்பிக்கையை விடவில்லை ஹொல்லா. வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் மாநில அளவில், தேசிய அளவில் உலக அளவில் என 393 தங்கப் பதக்கங்களையும், 27 வெள்ளிப் பதக்கங்களையும் அள்ளிக்கொண்டு வந்தவர். 5 முறை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட இவருக்கு அர்ஜுனா விருதையும், பத்ம விருதையும் வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இதுவரை 17 விருதுகளை பெற்றிருக்கும் மாலதி ஹொல்லா, எம்.ஏ. சைக்காலஜி முடித்துவிட்டு பெங்களூரில் சிண்டிகேட் வங்கியில் சீனியர் மேனேஜராக இருந்துவிட்டு அண்மையில் விருப்ப ஓய்வில் வெளியில் வந்துவிட்டார். எதற்காக? அதை அவரே சொல்கிறார்.
’’குழந்தைப் பருவத்து நாட் களை நான் அனுபவித்ததே இல்லை. 33 முறை அறுவை சிகிச்சை செய்தும் என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. அடையாறில் என்னோடு 150 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தார்கள், அப்போது, என்னைப் போல் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு குழந்தையை யாவது தத்து எடுத்து ஆளாக்கும் சக்தியை எனக்குக் கொடுக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வேன்.
நகரங்களில் உள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு தோள் கொடுக்க நிறைய அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், கிராமங்களில் அந்தக் குழந்தைகளை கரிசனம் கொண்டு பார்ப்பவர்கள் குறைவு. ’இது கடவுளின் சாபம்’ என்று சொல்லி பெற்றோரும் பேசாமல் இருந்துவிடுவார்கள். எனவே, கிராமத்து ஏழை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக பெங்களூரில் ஒரு இல்லம் தொடங்க நினைத்தேன். எனது விருப்பத்துக்கு நண்பர்கள் 5 பேர் தோள் கொடுத்தார்கள். அதிலும் 2 பேர் மாற்றுத் திறனாளிகள். எல்லோருமாய் சேர்ந்து ’மாத்ரு ஃபவுண்டேஷன் டிரஸ்ட்’ என்ற அமைப்பை பெங்களூரில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம்.
முதல் ஆண்டு 2 குழந்தைகளை மட்டும் தத்து எடுத்தோம். இப்போது 23 குழந்தைகள் எங்கள் இல்லத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு, மருத்துவம், படிப்பு அத்தனையையும் நாங்கள் வழங்குகிறோம். இவை அனைத்துமே சேவையுள்ளம் கொண்டவர்களின் நன்கொடை மூலமே நடக்கிறது. படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறோம். இதுவரை 6 குழந்தைகளுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இங்கிருப் பவர்களிலும் பாடகர்கள், ஓவியர்கள் என பல திறமைசாலிகள் இருக்கிறார்கள்.
ஒரு வகையில் பார்த்தால் மனிதர்கள் எல்லோருமே ஏதாவது ஒன்றில் இயலாதவர்களாய்தான் இருக்கிறார்கள். அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. எங்களின் இயலாமை மட்டும் வெளியில் தெரிகிறது. கைகால் சரியாக இல்லை என்பதற்காக மாற்றுத் திறனாளிகளுக்குள் பொதிந்து கிடக்கும் திறமைகளை மழுங்கடிப்பது சரியில்லையே.
அதற்காக இத்தனை குழந்தைகளும் ஜீனியஸ் ஆவார்கள் என்று நான் சொல்லவில்லை. இவர்களிலும் ஜீனியஸ் இருக்கிறார்கள் என்கிறேன். இந்த சமுதாயம் நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக இந்த சமுதாயத்துக்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும். அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ மனதைத் தொட்டார் மாலதி ஹொல்லா. (தொடர்புக்கு.. 09880080133)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT