Published : 21 Feb 2016 12:17 PM
Last Updated : 21 Feb 2016 12:17 PM
கங்கை நதியைத் தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கியுள்ளதுபோல காவிரியையும் தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அகில பாரத துறவியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகாமகத்தையொட்டி முதன் முறையாக கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் பாண்டுரங்க ஆசிரமத்தில் அகில பாரத துறவியர் மாநாடு கடந்த 18-ம் தேதி தொடங் கியது. இந்த மாநாட்டில் பல்வேறு மடங்களின் ஆதீனகர்த்தர்கள், துறவிகள், இந்து அமைப்பினர், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டின் இறுதி நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பாரதத்தின் முக்கியமான அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும். முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டும். கங்கையைத் தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது போல, காவிரியையும் தூய்மைப்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவது போல, கைலாய யாத்திரை செல்லும் அடியார்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையை தனித்து இயங்கும் வாரியமாக அறிவித்து, அதில், ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். பிற மதத்தினருக்கு வழங்கப்படும் கல்விச் சலுகைகளைப் போல இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளுக்கு குத்தகைச் சட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மகாமகச் சிறப்புமிக்க கும்பகோணத்தை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT