Last Updated : 04 Feb, 2016 10:36 AM

 

Published : 04 Feb 2016 10:36 AM
Last Updated : 04 Feb 2016 10:36 AM

நூற்றாண்டு கால குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி: மகாமக குள படித்துறைகளே 19 புனித தீர்த்தங்கள் - கல்வெட்டு ஆய்வில் புதிய தகவல்

மகாமகம் குளத்தின் தீர்த்தத் துறைகளே (படித்துறைகள்) புனித தீர்த்தங்கள் என கல்வெட்டுச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளார் கல்வெட்டியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

கடந்த சில நாட்களாக மகா மகக் குளக்கரையில் உள்ள சோடஷ லிங்க கோயில்கள் என அழைக்கப்படும் 16 சுற்றுக் கோயில் கள் குறித்த ஆய்வில், கல் வெட்டியல் ஆய்வாளரான முனை வர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டிருந்தார். குளத்தின் வட மேற்கு மூலையில் உள்ள பிரம்ம தீர்த்தேச்சுரர் கோயிலின் கருவறை முகப்பில், மகாமக குளத்தின் வரைபடத்துடன், தீர்த்தத் துறைகளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ள அரிய வடமொழிக் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசிமகத்தன்று, நீர் நிரம்பிய கும்பகோணம் மகாமக குளத்தின் படித்துறையில் பக்தர் கள் நீராடுவது வழக்கம். தற்போது, பக்தர்களின் பாதுகாப்பு காரண மாக மகாமக குளத்து நீரை வெளியேற்றிவிட்டு, முழங்கால் அளவுக்குக் குறைவான அளவு மட்டுமே நீரை நிரப்பி, குளத்தில் அமைந்துள்ள 20 கிணறுகளில் உள்ள நீரையே மக்கள் மீது தெளித்து புனித நீராடும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதற்காக, அந்தக் கிணறுகளின் அருகே அந்தந்த தீர்த்தத்தின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மகாமகம் பற்றிக் கூறும் நூல்கள் பலவும் இதேபோன்ற முரண்பட்ட தகவல்களையே குறிப்பிட்டுள்ளன.

கி.பி.1600-1645 வரை தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர், தனது தலைமை அமைச்சரான கோவிந்த தீட்சிதரின் வழிகாட்டுதலுடன் மகாமக குளத்தின் கரைகளைப் பலப்படுத்தி, நான்கு புறமும் படிக்கட்டுகள் அமைத்து, பின்னா ளில் இந்தக் குளத்தின் 20 தீர்த்தங் கள் எவை என்பதில் குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒரு கற்பலகையில் குளத்தின் வரைபடத்தை வடித்து, 16 சிவாலயங்களையும் குறிப்பிட்டு, அதன் அருகே உள்ள ஒவ்வொரு படித்துறையும் ஒரு தீர்த்தம் எனக் குறிப்பிட்ட சம்ஸ்கிருத எண்களைக் கல்வெட்டாக எழுதி, அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டுக்கு ‘மகாமக தடாகஸ்த தீர்த்தானி’என்று தலைப் பிட்டுள்ளார்.

அதற்குக் கீழே 20 என்ற எண்ணும், அதற்கும் கீழே, 1. நவகன்யா, 2. இந்திர, 3. அக்னி, 4. யம, 5.நிருதி, 6.வருணதேவ, 7.வாயு, 8.பிரம்ம, 9.குபேர, 10.ஈசான, 11.மத்யே 66 கோடி தீர்த்தம், 12.கங்கா, 14.நர்மதா, 15.ஸரஸ்வதீ, 16.கோதா வரி, 17.காவேரி, 18.கன்யா, 19.க்ஷீர நதி, 20.ஸரயூ நதி தீர்த்தங்கள் என வரைபடத்தில் உள்ள எண்களுக் குரிய தீர்த்தங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், வரைபடத்தில் கிழக்குத் திசை, அபிமுகேஸ்வரம், விஸ்வ நாதம் (காசி விசுவநாதர் கோயில்), வடகரையில் அரச மரம் உள்ள இடம் போன்ற குறிப்புகளும் காணப் படுகின்றன. இதில், பாலாற்றை க்ஷீர நதி எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு அம்சமாகும். இந்த வரைபடத்தையும், குறிப்புகளை யும் கல்லில் பொறிக்கச் செய்தவர் கும்பகோணம் குரு ராஜாச்சாரியர் என்பதும், இவர் கும்பகோணத்தில் வாழ்ந்த ராகவேந்திர சுவாமிகளின் பூர்வாசிரம சகோதரர் என்பதையும் அறியமுடிகிறது.

மகாமக குளத்தினுள் காணப் படும் கிணறுகள்தான் குறிப்பிட்ட தீர்த்தங்கள் எனக் கருதுவது தவறு என்பதை இந்த கல்வெட்டு ஆய்வில் அறியமுடிந்தது.

கங்கை நதிக்கரையான காசியில் இருப்பதுபோல, இங்கும் மகாமக குளத்தின் படித்துறைகளே 19 தீர்த்தங்களாகவும், குளத்தின் மையப்பகுதி 66 கோடி தீர்த்தமாக விளங்குகிறது என்று தெரிவித்த குடவாயில் பாலசுப்பிர மணியன், இந்த 20 கிணறுகளும் பின்னாளில் அமைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x