Last Updated : 17 Feb, 2016 04:30 PM

 

Published : 17 Feb 2016 04:30 PM
Last Updated : 17 Feb 2016 04:30 PM

தொகுதியைக் கைப்பற்ற கடும் போட்டி: ஸ்ரீவைகுண்டத்துக்கு மல்லுக்கட்டும் திமுக - காங்கிரஸ்

திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் தொகுதி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தொகுதியை கைப்பற்றுவதில் இந்த இருகட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் முக்கிய அந்தஸ்து பெற்ற தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் விளங்குகிறது. ஏ.பி.சி.வீரபாகு, சி.பா.ஆதித்தனார் போன்ற தலைவர்கள் வென்ற தொகுதி இது.

7 முறை வெற்றி

மேலும், மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் கருதப்படுகிறது. கடந்த 1957 முதல் இத்தொகுதி சந்தித்த 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது.

சென்னை மாகாணமாக இருந்த போது 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வீரபாகு இத்தொகுதியில் வென்றுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையான பிறகு 1984, 1989, 1991 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ச்சியாக எஸ்.டேனியல்ராஜ், 2006-ல் ஊர்வசி டி. செல்வராஜ், 2009 இடைத்தேர்தலில் எம்.பி. சுடலையாண்டி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் இத்தொகுதி யில் வென்றுள்ளனர்.

1967 மற்றும் 1971-ல் சி.பா.ஆதித்தனார், 1996-ல் எஸ்.டேவிட் செல்வின் ஆகியோர் திமுக சார்பிலும், 1977-ல் கே.சாது செல்வராஜ், 1980-ல் இ.ராமசுப்பிரமணியன், 2001, 2011-ல் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் அதிமுக சார்பிலும் இத்தொகுதியில் வென்றுள்ளனர்.

திமுகவில் கடும் போட்டி

அதிமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட பலர் விருப்ப மனுக்களை அளித்திருந்தாலும், தற்போதைய அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

திமுகவை பொறுத்தவரை ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. மதிமுகவில் இருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்த எஸ். ஜோயல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். திமுகவில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு கட்சியில் மாநில அளவிலான (மாநில இளைஞரணி துணை செயலாளர்) பதவி வழங்கப்பட்டது.

மேலும், திருநெல்வேலியில் நடந்த விழாவில் மதிமுகவினர் பலரை திமுகவில் இணைய வைத்தது, தேர்தல் நிதியாக சொந்த பணத்தில் ரூ.50 லட்சம் கொடுத்தது போன்றவை திமுக தலைமையிடம் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ஸ்ரீவைகுண்டம் தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பில் ஜோயல் இருக்கிறார்.

அதேநேரத்தில் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான, தூத்துக்குடி முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரையும் சீட் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறார். இவர்களைத் தவிர மேலும் சிலரும் கட்சித் தலைமையை அணுகி வருகின்றனர்.

விட்டுக் கொடுக்க கூடாது

காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் முன்புவரை திமுகவினர் உற்சாகமாகத்தான் இருந்தனர். தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதியானதும் திமுகவினர் மத்தியில் சற்று தயக்கம் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்த முறை ஸ்ரீவைகுண்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஸ்ரீவைகுண்டமும் ஒன்று. எனவே, இந்த தொகுதியில் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சி தலைமையிடம் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் உற்சாகம்

திமுகவுடன் கூட்டணி உறுதியானதும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி எப்படி யும் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 25-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

இவர்களில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்களான தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வி.பொன் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி டி.செல்வராஜின் மகன் அமிர்தராஜ், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் மூலம் சீட் பெறுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறார். தவிர தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மகேந்திரன் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.

இதில் பொன்பாண்டியன், ராணி வெங்கடேசன், அமிர்தராஜ் ஆகிய மூவருக்கும் சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்தாலும், வசிப்பது, வாக்குரிமை எல்லாம் சென்னையில் தான். எனவே, தொகுதியை ச் சேர்ந்தவருக்கே இம்முறை வாய்ப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும் என உள்ளூர் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

வெற்றி நிச்சயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. மேலும், காங்கிரஸ் செல்வாக்கு மிக்க சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு, அதில் இருந்த பெரும்பகுதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் தான் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் வெற்றி நிச்சயம் என அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.

இருப்பினும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா, திமுக தன் வசமே வைத்துக் கொள்ளுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x