Published : 18 Feb 2016 02:27 PM
Last Updated : 18 Feb 2016 02:27 PM

தமிழகத்தை உலுக்கும் செயற்கை மரணம்- ஓர் அதிர்ச்சி ஆய்வு

‘தலைக்கூத்தல்’ என்ற சடங்கு செய்து நோயுற்ற முதியோர்களை சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற கொலை பாதகச் செயல் 'கருணைக்கொலை' என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக் கழக மானியக் குழு ஏற்பாட்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை துணை பேராசிரியர் எம்.பிரியம்வதா இது குறித்து மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் தலைப்பு “தமிழகத்தில் முதியோர் கொலைகள் பற்றிய ஆய்வு” ஆகும்.

602 பேர்களிடம் ஒரு குறிப்பிட்ட 59 கேள்விகள் 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு கேட்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 30 சதவீதம் பேர்கள் வயதானோரை சடங்கார்த்தமாக கொலை செய்தல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று கூறினர். 22% பேர்கள் நோயுற்ற முதியோர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படுத்தும் சடங்குகளை நடத்தி அவர்கள் வாழ்க்கையை முடித்து வைக்கும் போக்குகளும் இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதில் வேறு வேறு 26 விதங்களில் நோயுற்ற, மனநிலை பிறழ்ந்த முதியோர்களை கொலை செய்தல் என்பது நடந்தேறி வருகிறது

ஆனால் இந்த சட்டவிரோத மாபாதக கொலைச் செயல்களுக்குக் காரணமாக ஆய்வில் பதிலளித்தோர், முதியோர்கள் நோயால் கஷ்டப்படுவதை தாங்க முடியாமல் ‘கருணை’ அடிப்படையிலேயே உயிர் மாய்க்கப்படுகிறது என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் பொருளாதார இயலாமை காரணங்களைச் சுட்டிக்காட்டினர்.

ஆனால் இவையற்ற பிற காரணிகளும் இருந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது, “தேனி மாவட்டத்தில் தனது வயதான தந்தையை அவரது மகனே கொலை செய்த சம்பவத்தில் அரசு வேலை தனக்குக் கிடைப்பதற்காக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.”

“முதலில் நாங்கள் விருதுநகர் மாவட்டத்தில்தான் ஆய்வு நடத்தினோம். ஆனால் ஆய்வின் போக்கில் இது மதுரை, தேனி மாவட்டங்களிலும் இந்த செயற்கை மரணம் விளைவித்தல் விவகாரம் தெரியவந்தது. தற்போது நாங்கள் திருநெல்வேலியில் ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் பேராசிரியர் பிரியம்வதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x