Published : 02 Aug 2021 07:56 PM
Last Updated : 02 Aug 2021 07:56 PM
‘‘30 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கிறார்கள், ’’ என்று தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழுமமும் இணைந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் உலக தாய்ப்பால் வார விழாவை கொண்டாடி வருகின்றன.
இந்த விழா வரும் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தாய்ப்பால் வார விழாவின் மையக்கருத்தாக ‘பாதுகாப்போம் தாய்ப்பால் ஊட்டுதலை; பகிர்ந்து கொள்ளுவோம் பொறுப்பினை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்களை அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
டீன் ரத்தினவேலு இன்று இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், ‘‘சுமார் 30 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்; மேலும், 60 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும் உணவாக கொடுக்கப்படுகிறது.
நகரமயமாதல், அவசர வாழ்க்கை, தாய்மார்கள் வேலைக்குச் செல்லுதல், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள், அறியாமை மற்றும் பால் பவுடர் கம்பெனிகளின் தந்திரமான வியாபார உத்தி ஆகியவையே இதற்கு காரணம்.
இவற்றை கவனத்தில் கொண்டே தாய்ப்பால் ஊட்டுவோர் சதவிகிதத்தை அதிகரிக்கும் விதமாக இந்த வருட உலக தாய்ப்பால் வாரவிழா மையக் கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகள் பெறவிருக்கும் மற்றும் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மகப்பேறு வார்டில் நடத்தப்படுகிறது. மருத்துவ மாணவர்கள், செவிலியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT