Published : 02 Aug 2021 07:17 PM
Last Updated : 02 Aug 2021 07:17 PM

காஞ்சிபுரத்தில் 35 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது: எஸ்.பி. சுதாகர் நடவடிக்கை 

காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர் எம்.சுதாகர்.

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலை, கொள்ளை அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டதின் பேரில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 35 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டதின் பேரில் மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி பஞ்சுப்பேட்டையைச் சேர்ந்த தணிகா (எ) தணிகைவேல் என்பவரும், அவரது வலதுகரமாகச் செயல்பட்டு வரும் கூட்டாளியான சரித்திரப் பதிவேடு குற்றவாளி வசா (எ) வசந்த் என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சோமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி மேத்யூ ஏழு கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேத்யூவைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில் மேற்படி பிரபல ரவுடிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலைய பிரபல ரவுடி ராஜா (எ) வசூல் ராஜா, , மாமல்லன் நகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு ரவுடியான அருண் (எ) ஏம்பா அருண், கரசங்கால் கிராமம் உட்பட இவ்வாண்டில் மட்டும் 109 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் அவர்களில் 35 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள், PPGD சங்கர், குணா (எ) படப்பை குணா ஆகியோர் தாங்கள் திருந்தி வாழ நினைப்பதாகவும், தங்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததைப் பரிசீலனை செய்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களை ஓராண்டிற்கு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 14 காவல் நிலையங்களில் உள்ள 246 சரித்திரப் பதிவேடு ரவுடிகளை எவ்விதக் குற்றச் செயலிலும் ஈடுபடாமலிருக்க வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களிடமிருந்து ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. நன்னடத்தையில் பெறப்பட்ட ரவுடிகள் மீண்டும் நன்னடத்தை பிணையை மீறி ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் கூறுகையில், ''பொதுமக்கள், வணிக வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்த எண்ணும் எவராயினும் சட்டத்தைக் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் காரணமாக தலைமறைவாக இருந்துவரும் பிற ரவுடிகளையும் பிடிக்க இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x