Published : 02 Aug 2021 06:31 PM
Last Updated : 02 Aug 2021 06:31 PM

கருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக நெகிழ்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

படத்திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கருணாநிதி என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 02) தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி, இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, கருணாநிதியின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நாள் இது. தமிழக, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு குடியரசுத் தலைவர் வருகை தந்திருக்கிறார். அவர் பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்காக வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும் அதனை ஏற்காமல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சமூக நீதியைத் தன் வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இத்தனை பெருமைக்குரிய அவர், நம் தமிழக சட்டப்பேரவைக்கு வந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

தமிழக சட்டப்பேரவை பல முன்னோடி சட்டங்களை இயற்றி, சமதர்ம சமூகத்தை உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. 1919-ம் ஆண்டு மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அந்நாளைய மாகாண சட்டப்பேரவைகளில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைந்திட வழிவகுத்தது.

அச்சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920-ம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. 1921-ம் ஆண்டு கனாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி, சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்ச்சியும், 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக, 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியும், 1997-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் தமிழக அரசால், சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதலாக மகளிருக்கு வாக்குரிமை அளித்த பெருமை சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு உண்டு. தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு, பெண் குழந்தைகளைக் காக்க சிறப்பு திட்டம் என, பெண்களுக்காக நாட்டுக்கே முன்னோடி திட்டங்களை உருவாக்கிய பெருமைகொண்டது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர்சூட்டிய தீர்மானம், சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது, நில சீர்திருத்த சட்டம், மே 1 அரசு விடுமுறை, மாநில சுயாட்சிக்கான தீர்மானம், பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் இயற்றியது, தகவல் அறியும் உரிமை சட்டம் என, பார் போற்றும் சட்டங்கள் இங்கு இயற்றப்பட்டன.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நிறுவப்பட்ட மாபெரும் வளாகம் இது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என தமிழ் மொழி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், ஏழை, எளியவர்கள், என, விளிம்புநிலை மக்களின் நலன் காக்க இந்தச் சட்டப்பேரவை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தச் சட்டப்பேரவையில் செயலாற்றிய கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்திருப்பது அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. 1957-ல், தனது கன்னிப் பேச்சில் விவசாயிகள் பிரச்சினையைப் பேசி கவனம் ஈர்த்தவர் கருணாநிதி. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி அனைவரின் அன்பையும் பெற்றவர். சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவர். மண்டல் ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்த தீர்மானம் கொண்டுவந்தவர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்மானம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், நுழைவுத்தேர்வுகளை ஒழிக்கக்கூடிய சட்டம் எனப் பல்வேறு புரட்சிகர சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.

அவருடைய திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது சர்.பி.டி.தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார் தொடங்கி, க.அன்பழகன் வரையிலான மாபெரும் தலைவர்களின் முகங்களைக் காண்கிறேன். இன்னும் முன்னால் இருந்து நம்மை வழிநடத்தும் தலைவராக அவரைப் பார்க்கிறேன். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தமிழன்னையின் தலைமகனான கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்திருப்பதை எண்ணி, தமிழக முதல்வராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x