Published : 02 Aug 2021 03:14 PM
Last Updated : 02 Aug 2021 03:14 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
கரோனா 3-ம் அலை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்இடி திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு ஆடியோவை வெளியிட்ட ஆட்சியர், மகளிர் திட்ட ஊழியர்கள் சார்பில் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தையும் பார்வையிட்டார். இதை தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பெரிய அளவிலான கரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியபடவில்லை. 3-ம் அலையை கட்டுபடுத்தும் வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள பயணிகளுக்கு தற்போது தொற்று அறிகுறி அடிப்படையில் பரிசோதனை செய்கிறோம். தேவைப்பட்டால் 100 சதவீதம் பரிசோதனை நடத்த தயாராக இருக்கிறோம்.
மாவட்டத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 3000- க்கும் அதிகமான கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியபட்ட இடங்களை கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றிடவும், அதனை தீவிரமாக கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் வரும் நபர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் குறித்து கண்காணித்து அவர்களை குறித்த அனைத்து தகவலும் சேகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 3.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் கேர் மையம் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 3-வது அலைை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.
இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும். மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுபாடு இல்லை என்று ஆட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT