Published : 02 Aug 2021 02:33 PM
Last Updated : 02 Aug 2021 02:33 PM

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தீர்ப்பு வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கொலை செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையா.

சென்னை

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பை வரும் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடைபெற்றது.

அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஷ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்றுப் பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை ஜூலை 28ஆம் தேதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளிவைத்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஜூலை 02) தீர்ப்புக்காக வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என, அவரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பு வரும் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என, நீதிபதி அல்லி தெரிவித்து வழக்கைத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x