Published : 02 Aug 2021 01:31 PM
Last Updated : 02 Aug 2021 01:31 PM
சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவில், அதிமுக பங்கேற்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று (ஆக. 02) கொண்டாடப்படுகிறது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இன்று மதியம் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
மேலும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தையும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவில், அதிமுக பங்கேற்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தைச் சட்டப்பேரவையில் திறந்தபோது, திமுக ஏன் அன்றைக்குப் பங்கேற்கவில்லை? காழ்ப்புணர்ச்சியுடன் அன்றைக்கு திமுக வராத நிலையில், இன்று எங்களால் அந்த நிகழ்ச்சியில் எப்படி கலந்துகொள்ள முடியும்?
நூற்றாண்டு விழா என்பது, 1952-லிருந்துதான் சுதந்திரம் பெற்ற பிறகுதான் சட்டமன்றத்தைக் கணக்கிட வேண்டும். சட்டமன்றம், சட்டமன்றப் பேரவை என்கின்றனர். எப்படிப்பட்ட விளக்கம் இது? 1921-ல் இருந்து திமுக கணக்கிட்டுள்ளது. கருணாநிதி, 1937-ஐ முதலாகக் கொண்டு 1989-ல் தமிழக சட்டப்பேரவையின் பொன்விழாவைக் கொண்டாடினார். இஷ்டப்படி வரலாற்றை மாற்றி எழுதுகின்றனர். நிச்சயமாக அந்த நிகழ்வில் எங்களால் கலந்துகொள்ள முடியாது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT