Published : 02 Aug 2021 01:13 PM
Last Updated : 02 Aug 2021 01:13 PM
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அத்துமீறிய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஆக. 02) வெளியிட்ட அறிக்கை:
"வங்கக் கடலில் கோடியக்கரைக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் இத்தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 28-ம் தேதி வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கில் 5 கடல் மைல் தொலைவில் நேற்றிரவு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.
சிங்களப் படையினரின் தாக்குதலில் இருந்து தப்ப தமிழக மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். கௌதமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது சிங்களப் படையினர் நடத்திய தாக்குதலில், அதில் பதுங்கி இருந்த கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையை உரசிக்கொண்டு, துப்பாக்கி குண்டுசென்றது. இந்தத் தாக்குதலில் கலைச்செல்வன் படுகாயமடைந்து நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 7 முறை தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தகைய தாக்குதல்களில் மீன்பிடி வலைகள் கிழிக்கப்பட்டதாலும், படகுகள் சேதப்படுத்தப்பட்டதாலும் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மட்டும் பல லட்சம் இருக்கும். ஆனாலும், சிங்களப் படையினரின் அத்துமீறல்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்காததுதான், தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் துணிச்சலை சிங்களைப் படையினருக்கு அளித்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி தமிழக மீனவர்களைத் தாக்குவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் குற்றம் ஆகும். இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்கள் எவரையும் இந்தியக் கடலோரக் காவல்படை தாக்குவதில்லை. மாறாக, அவர்களைக் கைது செய்து, கண்ணியமாக நடத்துகிறது.
மாறாக, தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துவதும் இந்தியாவை சீண்டும் செயலாகும். இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்கியதற்காக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை அழைத்துக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கேரளத்தின் அரபிக் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்றதற்காக இத்தாலியக் கடற்படையினரைக் கைது செய்ததைப் போன்று, இந்த விஷயத்திலும் தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரை உடனே கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT