Published : 02 Aug 2021 11:02 AM
Last Updated : 02 Aug 2021 11:02 AM
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒரு வார்த்தையைக்கூட அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதில்லை என, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா இன்று (ஆக. 02) மாலை நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தைத் திறந்துவைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"சட்டப்பேரவையைப் பொறுத்தவரையில் 1967-ல் ஆட்சிக்கு வந்தபிறகு, நான் எம்எல்ஏ இல்லையென்றாலும், எப்போதும் கருணாநிதியுடனேயே இருப்பேன். கருணாநிதியுடன் இணைந்தே சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கவனித்துள்ளேன். 1971-ல் இருந்தே சட்டப்பேரவையில் கருணாநிதியுடன் தொடர்ந்து பயணம் செய்திருக்கிறேன்.
சட்டப்பேரவையில் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை ஒரு ஆசிரியர் போல் கருணாநிதி எங்களுக்குச் சொல்வார். எப்படிப் படிக்க வேண்டும், என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும், எப்படித் துணைக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்லிக்கொடுத்தவர்.
அவர் ஒரு வார்த்தையைப் பேசி, அது அவைக்கு ஏற்றதல்ல என, அவைக்குறிப்பிலிருந்து எந்த சபாநாயகரும், அவரின் பேச்சை நீக்கியதே இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அப்படித்தான். சபையின் கண்ணியம் அறிந்து பேசுவார். அமங்கலச் சொற்களையோ, அவைக்குப் புறம்பான சொற்களையோ பேசவே மாட்டார். எதிர்க்கட்சியினரைத் தாக்கும்போதும் அப்படித்தான்.
நான் 53 ஆண்டுகள் அவருடன் இருந்திருக்கிறேன். என்னால் அவரை பிரித்துப் பார்க்கவே முடியாது. படத்திறப்பின்போது சபையில் நான் அழாமல் இருக்காமல் இருக்க வேண்டும். எங்கள் தலைவர் புகைப்படத்தை நாங்களே திறப்போம் எனக் கூறினேன். அதனை நிறைவேற்றியிருக்கிறோம்".
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT