Last Updated : 28 Feb, 2016 03:54 PM

 

Published : 28 Feb 2016 03:54 PM
Last Updated : 28 Feb 2016 03:54 PM

கடும் போட்டிக்கு இடையே குமரியில் ‘தாமரை’ மலருமா?- எதிர்பார்ப்பில் பாஜக தொண்டர்கள்

குளச்சல் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட வளர்சிப் பணிகளால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும். அதன் காரணமாக வரும் சட்டப்பேரவையில் அக்கட்சி வெற்றிவாகை சூடும் என்று பாஜக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக அளவில் வாக்கு வங்கி உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே தொகுதி கன்னியாகுமரி மட்டுமே. குறிப்பாக குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிகளில் பாஜகவின் பலத்தையும், பலவீனத்தையும் கணக்கிட்டே தங்களின் வேட்பாளர்களை பிற கட்சிகள் தேர்வு செய்கின்றன. அந்த அளவுக்கு பாஜகவின் செல்வாக்கு அப்பகுதிகளில் பரவலாக உள்ளது.

வேலாயுதனுக்கு பின்பு பாஜக சார்பில் சட்டப்பேரவையில் இடம்பெற இதுவரை வேறு யாரும் தேர்வு பெறவில்லை என்ற குறை அக்கட்சிக்கு உள்ளது.

இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலைப் போன்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் கன்னியாகுமரியில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்று பாஜக களம் இறங்கியுள்ளது.

மாற்றம் நிகழும்

இம்முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சமீபத்தில் பாஜக மாவட்ட தலைவராக டி.குமாரதாஸ் நியமிக்கப்பட்டார். அவர் கூறும்போது, “பாஜக தொண்டர்கள் எப்போதையும் விட அதிக நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. இதற்கு ஜாதி, மதத்துக்கு அப்பற்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனை, நாட்டின் வளர்ச்சிக்காக அவரது அயராத உழைப்பு, இளைய சமுதாயத்தினர் அவர்மீது கொண்டுள்ள மரியாதை ஆகியவை கைகொடுக்கும்.

குளச்சல் துறைமுகத் திட்டம்

குளச்சல் துறைமுகத் திட்டத்தால் கன்னியாகுமரியில் வளர்ச்சி ஏற்படும். இத்திட்டத்துக்கு சிலர் தெரிவிக்கும் எதிர்ப்பால் பாதிப்பு ஏற்படாது. பல ஆயிரம் மீனவர்கள் இத்திட்டத்தால் பலன்பெறுவார்கள் என்பதால் மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால்தான் குளச்சல், கொட்டில் பாடு, கன்னியாகுமரி, மணக்குடி போன்ற மீனவ கிராமங்களில் முதல்கட்டமாக மீனவர்கள் அடங்கிய பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். குஜராத், மற்றும் பிற மாநிலங்களில் தங்கி மீன்பிடித்து வரும் குமரி மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மோடி தலைமையிலான அரசால் பெற்றுவரும் பலனால் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பி யுள்ளனர். குறிப்பாக கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற பேதமின்றி இம்முறை அதிகமானோர் வாக்களிப்பர்.

வளர்ச்சிப் பணிகள்

இதைப்போல் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் முயற்சியால் ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நாற்கர சாலை திட்டங்கள், அடுத்ததாக அமைய இருக்கும் தேசிய இணைப்புச் சாலைகள், சுற்றுலா திட்டங்கள் போன்றவை பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளன. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலாவது நிச்சயம் தாமரை மலரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் அவர்.

‘தாமரை’ மலருமா?

கன்னியாகுமரி, நாகர்கோ வில், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் திராவிட கட்சிகளே தொடர்ந்து வெற்றி வாகை சூடிவருகின்றன.

குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதி களையும் கடந்த இரு தேர்தலிலும் தொடர்ச்சியாக காங்கிரஸ் கைவசம் வைத்துள்ளது. விளவங் கோடு தொகுதியும் தற்போது காங்கிரஸ் வசமே உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தற்போது நடக்கும் பலமான தேர்தல் யுத்தத்தை தாண்டி சட்டப்பேரவையில் குரல்கொடுக்க குமரியில் ‘தாமரை’ மலருமா? என்ற எதிர்பார்ப்பு பாஜக தொண்டர் களிடையே எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x