Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நூறாண்டு பழமையான படுகை அணை இடியும் தருவாயில் உள்ளது. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாததால் 20 கிராமத்தினர் கடும் பாதிப்பில் உள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் படுகை அணை சேதம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும் படுகை அணையை நிரந்தரமாக சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவ்வப்போது மழைக் காலங்களில் மட்டும் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்படும்.
கடந்த டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் திடீர் சுற்றுலா தலமாகவும் மாறியது. ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர். அதையடுத்து பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக படுகை அணையில் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, படுகை அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலில் கலக்கிறது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறுகையில், “நூறாண்டு பழமையான செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்து பல ஆண்டுகளாகிவிட்டது. பிரெஞ்சுக்காரர்கள் கட்டித் தந்த பொக்கிஷமான இந்த அணையை சீர் செய்து தர செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம் உட்பட 20 கிராம மக்கள் அரசிடம் மனு தந்தோம். ஆனால் அந்த மனுவை கிடப்பில் போட்டுவிட்டனர். மழைக் காலங்களில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்குகிறார்கள். தற்போது 60 சதவீதம் வரை அணை சேதமடைந்துவிட்டது. ஆறு மாதம் வரை தேங்கியிருக்க வேண்டிய தண்ணீர் தற்போது வழிந்தோடி புல்தரையாகவும், கருவேலம் மரங்களும் முளைத்துவிட்டன. 20 கிராமங்களின் நிலத்தடி நீர் உயரவும், விவசாயத்துக்கு உதவும் இந்த அணையை சீர்செய்ய அதிகாரிகளும், அரசும் மறுக்கிறார்கள். இந்த அணையில் இருந்து கீழ்பக்கம் 300 மீட்டரில் புதிய அணையை கட்டலாம். பழமையான அணையை சீர் செய்து வைத்தால் மக்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். பல பிரச்சினைக்கு தீர்வாக அமையும்” என்று குறிப்பிட்டனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “செல்லிப்பட்டு படுகை அணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி சேதமடைந்தது. கடந்தாண்டு கனமழையால் சேதம் அதிகமானது. இந்த அணையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சுமார் ரூ.15 கோடி செலவில் புதிய படுகை அணை கட்டும் திட்டமுள்ளது” என்று குறிப் பிட்டனர்.
செல்லிப்பட்டு கிராம மக்கள் கூறுகையில், “பழைய அணையை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்றலாம். புதிய அணையை கட்டுவதாக அதிகாரிகள் பல காலமாக சொல்லி வருகின்றனர். ஓராண்டுக்குள் புதிய அணையை கட்டுவது அவசியம்” என்று வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT